Monday, April 23, 2012

கலெக்டரை விடுவிக்க நாளை மறுநாள் வரை கெடு!

Monday, April, 23, 2012
ராய்ப்பூர்::சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட கலெக்டரை மீட்க முதல்வர் ராமன்சிங் தலைமையில் ஐவர் கமிட்டி உருவாக்கப் பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நேற்று முன்தினம் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். மஜ்ஹிபாரா கிராமத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 50க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி முனையில் அவரை கடத்தினர். தடுக்க முயன்ற பாதுகாவலர்கள் இரண்டு பேரையும் சுட்டுக் கொன்றனர். கடத்தப்பட்ட கலெக்டர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், தமிழகத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலெக்டரை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து நக்சல் வேட்டை ஏடிஜிபி ராம் நிவாஸ் கூறுகையில், ‘‘கடத்தல் குறித்து கலெக்டருடன் சென்ற மற்ற அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். கலெக்டரின் இருப்பிடம் குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அதனை வெளியிட முடியாது. அவர் பாதுகாப்பாக இருப்பதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. கலெக்டரை உயிருடன் மீட்போம்’’ என்றார். கலெக்டரை மீட்க எல்லா முயற்சிகளையும் சட்டீஸ்கர் அரசு எடுக்கும் என மாநில முதல்வர் ராமன்சிங் உறுதி அளித்துள்ளார். அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என மத்திய உள்துறை அமைச்சகமும் உறுதி அளித்துள்ளது.

இதற்கிடையில் டிவி நிறுவனம் ஒன்றுக்கு பெயர் குறிப்பிடாத நக்சல் தலைவர் ஒருவரிடமிருந்து நேற்று ஒரு ஆடியோ கேசட் வந்தது. அதில், ‘சுக்மா மாவட்ட கலெக்டரை விடுவிக்க வேண்டும் என்றால் நக்சல்களுக்கு எதிரான ஆபரேஷன் கிரீன் ஹண்ட் தேடுதல் வேட்டையை உடனடியாக நிறுத்த வேண்டும். சிறையில் இருக்கும் நக்சல் தலைவர்கள் சத்யம் ரெட்டி, விஜய்லட்சுமி, சந்திரசேகர் ரெட்டி, சாந்திபிரியா ரெட்டி, மீனா சவுத்ரி, கொர்சா சன்னி, மார்கம் சன்னி மற்றும் அசித் குமார் சென் ஆகிய 8 பேரை 25ம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட் தரப்பிலிருந்து நேரடியாகவோ, தூதர்கள் வாயிலாகவோ இதுவரை யாரும் அரசுடன் தொடர்பு கொள்ளவில்லை. ஆடியோ கேசட் உண்மையானது தானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் கடத்தப்பட்ட கலெக்டர் ஒடிஷா மாநில எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, ஆந்திரா, ஒடிஷா, சட்டீஸ்கர் மாநில அரசுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சமீபகாலமாக அதிகரித்துவரும் நக்சல் பயங்கரவாதத்தை தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், கலெக்டர் மீட்பு நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக மாநில அமைச்சரவை கூட்டத்தை சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங் இன்று அவசரமாக கூட்டியுள்ளார். முதல்வர் தலைமையில் ஐவர் கமிட்டி சட்டீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட கலெக்டரை மீட்க முதல்வர் ராமன்சிங் தலைமையில் ஐவர் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாநில உள்துறை அமைச்சர் நன்கிராம் கன்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் மோகன்அகர்வால், ஊரகவளர்ச்சி துறை அமைச்சர் ராம் விசார் மற்றும் அமைச்சர் கேதார் கஷ்யப் இடம்பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment