Friday, April 20, 2012

இலங்கையில் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகள் குறித்து இந்தியக் குழு திருப்தி - யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு!

Friday, April, 20, 2012
இலங்கை::இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் நேற்று மூன்றாவது நாளாக யாழ். நகரில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

நேற்று முன்தினம் இரவு யாழ். நகர் சென்ற குழுவினர் இரவு டில்கோ ஹோட்டலில் நடைபெற்ற இராப்போசன விருந்தில் கலந்துகொண்டனர். நேற்றுக் காலை வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியினால் ஏற்பாடு செய்யப்பட்ட காலை விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர்.

யாழ். ஞானம்ஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் விருந்துபசாரத்தின் விசேட கலந்து ரையாடல்களும் நடைபெற்றன.

யுத்தத்தின் பின்னர் வடக்கின் வசந்தம் என்ற துரித அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வட மாகாணம் கல்வி, சுகாதாரம், விவசாயம், உட்கட்டமைப்பு, கடற்றொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் குறித்தும் இத்திட் டங்களுக்காக அரசு இதுவரை ஒதுக் கியுள்ள நிதிகள் குறித்தும் ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி இந்திய குழுவினருக்கு தெளிவுபடுத்தினர். இந்திய பிரதிநிதிகள் குழுவும் தாங்கள் தெளிவுபெறும் விதத்தில் தொடர்ந்தும் கேள்விகளைக் கேட்டனர்.

ஆளுநருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வட மாகாண அபிவிருத்திகள் குறித்து விளக்கமளித்தார்.

நீண்டகாலம் யுத்தம் நடைபெற்ற இப்பகுதியில் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி பணிகள் குறித்து தமக்கு திருப்தியளித்துள்ளதாக இந்திய பிரதிநிதிகள் குழுவினர் தெரிவித்தனர்.

இவர்களுடன் மு. சந்திரகுமார் எம்.பி. எலன்றின் உதயன் எம்.பி. ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

வட மாகாணத்தில் இந்திய அரசினுடைய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுவரும் வீடமைப்புத் திட்டங்கள் தாமதமடைவதற்கு இந்திய ஒப்பந்தக்காரர்களே காரணம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த இந்திய பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினர்.

யாழ். குடாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்திய எம். பிக்கள் குழுவினரை சந்தித்துப் பேசினர்.

யாழ். ஞானம்ஸ் ஹோட்டலுக்கு வருவதற்கு முன்னதாக நல்லைக்கந்தன் ஆலயத்திற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது ஆலயத்திற்கு முன்பாக இந்திய பிரதிநிதிகள் குழுவினரிடம் மகஜர் ஒன்றை கையளிப்பதற்கான ஏற்பாடுகளும் யாழ். மாவட்ட கடற்றொழிளாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர். தவரட்னம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் இறுதி நேரத்தில் யாழ். நல்லைக்கந்தன் ஆலயத்திற்கு செல்லும் ஏற்பாடு ரத்துச் செய்யப்பட்டதால் கடற்றொழிளாளர்கள் ஞானம்ஸ் ஹோட்டலுக்குச் சென்று மகஜரை கையளித்தனர்.

ஞானம்ஸ் ஹோட்டலிலிருந்து புறப்பட்ட குழுவினர் காங்கேசன்துறை துறைமுகத்துக்குச் சென்றனர். இந்திய அரசின் நிதிஉதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக அபிவிருத்தி வேலைகளைப் பார்வையிட்டனர். அங்கிருந்து பலாலி விமான நிலையம் வந்த குழுவினர் விமானப்படையின் பயணிகள் விமானம் மூலம் நேற்று 1.20க்கு இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

No comments:

Post a Comment