Monday, April 30, 2012

உதயகுமாரை கைது செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : யுவராஜா பேட்டி!

Monday, April, 30, 2012
ராமநாதபுரம்:;கூடங்குளத்தில் வன்முறையை தூண்டும் உதயகுமாரை கைது செய்ய, முதல்வர் ஜெயலலிதா, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழக இளைஞர் காங்., தலைவர் யுவராஜா கூறினார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளிலும், இளைஞர் காங்., உறுப்பினர் சேர்க்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அதிகரிப்பால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிட்டது. கூடங்குளம் மின்சாரத்தை, தமிழகத்திற்கே முழுவதுமாக வழங்க வேண்டும். இலவசங்களுக்கான நிதியை ஜெ., நிறுத்திவிட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும்.

கூடங்குளம் மக்களின் கோரிக்கை ஏற்கப்படும். அங்கு மின் உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட உதயகுமாரை, கைது செய்யாததற்கு, சட்ட அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். மீண்டும் வன்முறையை தூண்டும் உதயகுமாரை, உடனே கைது செய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரிச்சுமை, பால், பஸ் கட்டண உயர்வு, துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்களால் மக்கள் தமிழக ஆட்சி மேல் நம்பிக்கை இழக்கும் சூழலில் உள்ளனர். சட்டசபையில், தொகுதி பிரச்னையை பேசவிடாமல் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கும் சூழல் ஏற்படுத்தியுள்ளனர். இலங்கை சென்ற எம்.பி.,க்கள் குழுவில், தி.மு.க.,-அ.தி.மு.க., பங்கேற்றிருக்க வேண்டும். மாவேயிஸ்ட்களால் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.

No comments:

Post a Comment