Wednesday, April 18, 2012

சுஸ்மா சுவராஜ் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவை மலையகத்தைச் சேர்ந்த கட்சிகளும் தொழிற்சங்கங்களும் கூட்டாக சந்திப்பு!

Wednesday,April,18, 2012
இலங்கை::இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவியான சுஸ்மா சுவராஜ் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவை மலையகத்தைச் சேர்ந்த கட்சிகளும் தொழிற்சங்கங்களும் கூட்டாக சந்தித்து மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

நேற்று மாலை (17.04.2012) கொழும்பு தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் மலையககக் கட்சிகளின் சார்பில் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணண், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம்,

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர், ஆர்.யோகராஜன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எஸ். சதாசிவம்,

மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிங்.பொன்னையா, முரளி ரகுநாதன், ஊவா மாகாண சபை உறுப்பினர் அரவிந்தகுமார், மேல்மாகாண சபை உறுப்பினர் ராம், மற்றும் மலையக மக்கள் முன்னணி தலைவி சாந்தினி சந்திரசேகரன், பொதுச்செயலாளர் லோரன்ஸ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளர் திலகராஜ் மற்றும் தேசிய அமைப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலையக மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த கலந்துரையாடலில் இந்திய பாராளுமன்ற தூதுக்குழுவுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் மலையக மக்களின் அபிவிருத்தி மேம்படுத்தப்படவேண்டும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே அது நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் அதிக கவனம் மலையக மக்கள் குறித்து செலுத்தப்படுதலில் அக்கறை காட்டப்படுதல் வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

அதிகார பரவலாக்கம் ஒன்று ஏற்படும் பட்சத்தில் மலையக மக்களின் பிரச்சினைகள் தனியாக அணுகப்படவேண்டும் எனவும் இலங்கையின் ஒட்டு மொத்த தமிழர் பிரச்சினையோடு மலையக மக்களின் பிரச்சினை வேறுபட்ட பரிமாணங்களையும் கொண்டது என தெரிவிக்கப்பட்டது.

மலையக மக்களின் பல்வேறு சமூக பொருளாதார கல்வி மற்றும் அபிவிருத்திப் பணிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திக்கும் பத்து ஆண்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளபோதும் அவை நடைமுறைபடுத்தப்படாத நிலை காணப்படுவதையும் அவற்றை நடைமறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உந்துதல் அளிக்கவேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் சார்பில் இந்திய வம்சாசவளி மலையக மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள அபிவிருத்திப்பணிகளுக்காக நன்றி தெரிவிக்கப்பட்டதோடு அவை மேலும் விஸ்தரிக்கப்படவேண்டும் எனவும் குறிப்பாக டிக்கோயா வைத்தியசாலை போன்று நுவரெலியா பிரதேச சபையை மையமாகக் கொண்ட இன்னுமொரு வைத்திய சாலை உருவாக்குவதற்கும் தொழிநுட்பக் கல்லூரி ஒன்றை தாபிப்பதற்கும், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்விக்கான புலமைப் பரிசில்கள் எல்லா தரப்பு மலையக மக்களையும் சென்றடையும் வண்ணம் விஸ்தரிக்கப்படல் வேண்டும் எனவும் தூதுக்குழுவினருக்கு எடுத்து கூறப்பட்டது.

இலங்கையில் இந்திய வம்சாவளி மக்கள் மலையகப்பகுதிகளில் மாத்திரமன்றி தென்னிலங்கையில் பரவலாகவும் கணிசமான தொகையினர் வடகிழக்கிலும் வாழ்வதாகவும் இந்த அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் பொறிமுறை ஒன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தில் உள்வாங்கப்படல்வேண்டும் எனவும் இது குறித்து அனைத்துக்கட்சி மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கப்பட்டது.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறித்து இந்திய அரசாங்கத்துக்கு பாரிய பொறுப்பு இருப்பதனை இந்திய ஏற்றுக்கொள்ளவேண்டும் என கூட்டாக மலையக கட்சிகள் எடுத்துரைத்தன.

கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்த பல்வேறு ஆவணங்களும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் தூது குழுவினருக்கு கையளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment