Thursday, April, 26, 2012இலங்கை::யாழ் தெல்லிப்பழை வசந்தபுரத்தில் மீள்குடியேறியுள்ள மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் நோர்வேயின் நிதி உதவியின் கீழ் இந்த வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுத்திருந்தது.
உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து பின்னர் மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியிலேயே இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
வசந்தபுரத்திலிருந்து மொத்தமாக 250 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்ததாகவும் அவர்களில் 190குடும்பங்கள் 2010 ஆம் ஆண்டு மீள்குடியேறியதாகவும் அரச அதிபர் குறி்ப்பிட்டார்.
இதில் மிகவும் வறிய நிலைமையில் இருந்த 50 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களது சொந்தக் காணிகளில் தலா எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனைத் தவிர பொதுநோக்குக் கட்டடம், கூட்டுறவு விற்பனை நிலையம், சிறுவர் பாடசாலை உள்ளிட்ட கட்டடங்களும் தெல்லிப்பழை வசந்தபுரத்தில், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தினால் நோர்வேயின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment