Wednesday,April,18, 2012இலங்கை::இலங்கையில் 95 சதவீதம் பேரை குடியமர்த்தி விட்டோம்: இந்திய குழுவிடம் பாசில் ராஜபக்ஷே தகவல்!:அரசியல்தீர்வுக்கு 13 ஆவது திருத்தம் அடிப்படையாக அமையலாம்: சுஷ்மா ஸ்வராஜ்!
இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களில், இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் ஓடியவர்களைத் தவிர, மற்றவர்களில் 95 சதவீதத்தினர் மறு குடியமர்த்தப்பட்டு விட்டனர்' என, இலங்கை சென்ற இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம், அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாசில் ராஜபக்ஷே கூறினார்.
இலங்கையில் கடந்த 2009ல், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நிகழ்ந்த இறுதிகட்டப் போரில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, இந்திய அரசின் நிதியுதவியுடன் பல்வேறு மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை பார்வையிடுவதற்காக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், 12 பேர் கொண்ட எம்.பி.,க்கள் குழுவினர், நேற்று முன்தினம் இலங்கை சென்றனர்.
அமைச்சர்களுடன் சந்திப்பு: ஆறு நாள் பயணமாக இலங்கை சென்ற அவர்கள், நேற்று கொழும்பில், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், பொருளாதார மேம்பாட்டுத் துணை அமைச்சர் பாசில் ராஜபக்ஷே ஆகியோரை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது, பாசில் ராஜபக்ஷேயிடம் எம்.பி.,க்கள் குழுவினர், "இலங்கையின் இறையாண்மையை இந்தியா எப்போதுமே மதிக்கிறது, இரு நாடுகளுக்கு இடையே நட்பு ரீதியிலான உறவுமுறைகளை பலப்படுத்தவே இந்தியா விரும்புகிறது' எனத் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த பாசில் ராஜபக்ஷே, இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களை மறு குடியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவரித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
50 ஆயிரம் வீடுகள்: இலங்கையில் இருந்து இந்தியா மற்றும் சில நாடுகளுக்கு ஓடியவர்களை தவிர, இடம் பெயர்ந்தவர்களில் 95 சதவீதம் பேரை மறு குடியமர்த்தும் பணிகள் நடந்துள்ளன. இடம் பெயர்ந்தவர்களுக்காக, இலங்கை அரசு வீடுகளை கட்டியுள்ளது. அத்துடன், இந்தியா அளித்த நிதியில், 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இடம் பெயர்ந்தவர்களுக்கு தேவையான உபகரணங்களும், பண உதவியும், ரேஷனும் வழங்கப்பட்டு வருகிறது. அது மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். அத்துடன் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மிக குறைவான காலத்தில், இலங்கை அரசு அமைதி திரும்பச் செய்துள்ளது. இந்திய குழுவினர் கிளிநொச்சிக்கு செல்ல வேண்டும். அங்கு நிகழ்ந்துள்ள மாற்றங்களை கண்டறிய வேண்டும். இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.
இலங்கையில் அரசியல்தீர்வுக்கு 13 ஆவது திருத்தம் அடிப்படையாக அமையலாம்: சுஷ்மா ஸ்வராஜ்!
தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் அடிப்படையாக அமையலாமென இலங்கை அரசாங்கத்திடம் இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவினர், சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழுவினரை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.
தற்போதைய அரசாங்கமானது பல்வேறு கொள்கைகளையுடைய கட்சிகளினால் அமைக்கப்பட்டதெனவும் அதனால் தேசிய பிரச்சினை தொடர்பில் ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இச்சந்திப்பின்போது கூறினார்.
இதனால், அனைத்து கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வுகாண்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க அரசாங்கம் தீர்மானித்ததாக கூறிய அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தெரிவுக்குழுவிற்கு தனது பிரதிநிதிகளை நியமிக்காததை விமர்சித்தார்.
ஆனால், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கும் பொறுப்பை அலட்சியப்படுத்தியதாக இச்சந்திப்பில் பங்குபற்றிய த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்துடன் கடந்த வருடம் ஜனவரி மாதம் தமது கட்சி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது எனவும் ஆனால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என சம்பந்தன் எம்.பி கூறினார். கடந்த காலங்களில் தமிழ் கட்சிகளின் ஜனநாயக போராட்டங்கள் எவ்வாறு அடக்கப்பட்டன என்பதையும் அந்நிலைமை தமிழ் ஆயுதகுழுக்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தமையையும் அவர் விளக்கினார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஆகியோரின் உரைகளை செவிமடுத்த இந்திய லோக்சபா எதிர்க்கட்சி தலைவி சுஸ்மா ஸ்வராஜ், இயன்றவரை விரைவாக அரசியல் தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது முக்கியமானது என்றார். 13 ஆவது திருத்தச்சட்டம் அல்லது அதற்கு அப்பாலான அரசியல்தீர்வுக்கு இலங்கை வாக்குறுதியளித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
தமது தூதுக்குழு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்ததாகவும் அவர் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் குறித்து விளக்கியதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அபிவிருத்திப்பணிகள் மாத்திரம் தமிழ் மக்களுக்கு போதுமானதாக அiமையாது என இந்திய தூதுக்குழு சுட்டிக்காட்டியது.
இதேதேவைள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு த.தே.கூட்டமைப்பு பிரதிநிதிகளை நியமிக்கும்வரை, தானும் தனது பிரதிநிதிகளை நியமிக்கப்பபோவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.
இவ்விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு முக்கிய பங்குதாரர் எனவும் எனவே தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் த.தே.கூட்டமைப்பின் பங்குபற்றல் மிக முக்கியமானது எனவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க கூறினார்.
No comments:
Post a Comment