Monday, April 30, 2012

ஜெர்மனியில் பாடமாகிறது ஹிட்லரின் சுயசரிதை 67 ஆண்டு கழித்து அச்சாகும் புத்தகம்!

Monday, April, 30, 2012
லண்டன்::சிறையில் இருந்தபோது ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகம், பள்ளி மாணவர்களுக்கு பாடமாகிறது. இப்புத்தகம் 67 ஆண்டுகளுக்கு அச்சிடப்படுகிறது.
உலகப்புகழ் பெற்ற ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். முதல் உலகப் போரில் போரிட்ட இவர் 1918,ல் போர் முடிந்த பிறகு, ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். படிப்படியாக வளர்ந்து தலைமை இடத்தை பிடித்தவர், அரசை எதிர்த்து 1923,ல் திடீர் புரட்சியில் ஈடுபட்டார். புரட்சி தோல்வியில் முடிந்ததால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது ‘மெய்ன் காம்ஃப்’ (மை ஸ்டிரகிள்) என்ற சுயசரிதை எழுதினார்.
ஹிட்லரின் அரசியல் சிந்தனையை விளக்கும் வகையிலான இந்த புத்தகம் முதலில் 1925,ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2,ம் பாகம் 1926,ல் வெளியிடப்பட்டது. 1945,ம் ஆண்டு வரை மொத்தம் 1 கோடி பிரதிகள் அடிக்கப்பட்டன. அதற்கு பிறகு அச்சிடப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 67 ஆண்டுகளாக அச்சிடப்படாமல் இருக்கும் ‘மை ஸ்டிரகிள்’ புத்தகத்தை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் அச்சிட்டு வழங்க ஜெர்மனியின் பவேரியா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பவேரியா மாநில நிதி அமைச்சர் மார்கஸ் சோடர் கூறியதாவது:
மை ஸ்டிரகிள் அல்லது மை பேட்டில் என்ற பெயரில் மாணவர்களுக்கு இப்புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதில் ஹிட்லரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்த தகவல்கள் இருக்கும். பெர்லினில் ஹிட்லர் 1945,ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் பற்றிய தகவல்களை குழந்தைகள் அறிந்துகொள்வது அவசியம் என்பதால் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி அறிந்துகொள்வதும் புத்தகம் வெளியிடுவதும் சட்டத்துக்கு புறம்பானது அல்ல. நாசிச கொள்கைகள் நாட்டில் அதிகரிக்கக் கூடும் என்று கருதப்பட்டதால் இதுவரை இப்புத்தகம் அச்சிடப்படாமல் இருந்தது. கல்வி ஆராய்ச்சியாளர்கள், வல்லுனர்களின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, 67 ஆண்டுகள் கடந்த நிலையில் ‘மை ஸ்டிரகிள்’ மீண்டும் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment