Tuesday, March 20, 2012

Round up News!

Tuesday, March 20, 2012
சென்னை::அமெரிக்க தீர்மானம் குறித்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பதில் ஏமாற்றம் அளிக்கிறது: ஜெயலலிதா அதிருப்தி!

முதல் அமைச்சர் ஜெயலலிதா 19.03.2012 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

19.3.2012 அன்று நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் அவர்கள், அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் இறுதி வடிவம் தன்னிடம் இல்லை என்று கூறிவிட்டு, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்திய அரசு உள்ளதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு சுயமரியாதை, சம அந்தஸ்து, கண்ணியம் இவற்றுடன் கூடிய எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தான் தெரிவித்துள்ளார்.

இந்த பதிலில் பிரதமர் அவர்கள் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து எதையுமே குறிப்பிடவில்லை. மனித உரிமைகள் மீறலுக்காக இலங்கை அரசு கண்டிக்கப்படும் என்றும் கூறவில்லை. இது ஒரு மழுப்பலான, பயனில்லாத ஒரு பதில் தான். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எஸ்எம்.கிருஷ்ணாவுடன் பேச்சு நடத்த இலங்கை முடிவு!

புதுதில்லி::இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் அறிவித்துள்ளதையடுத்து வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை இலங்கையின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனிவாவில் இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம், அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எடுத்துரைப்பார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் புலி ஆதரவு சக்திகள் உண்ணாவிரதம்!

திருச்சி அருகே வாழவந்தான்கோட்டை புலி ஆதரவு அகதிகள் முகாமில் 800 பேர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உண்ணாவிரதம் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை இந்தியாதான் கொண்டு வந்திருக்க வேண்டும்: டி.ராஜா!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா விரும்புகிறது' என்று பிரதமர் மன்மோகன் சிங் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா கூறுகையில்,

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாதான் கொண்டு வந்திருக்க வேண்டும். இன்றைக்கு நிலவும் சூழலிலும் போர்க்குற்றங்கள் தொடர்பான தீர்மானத்தின் நகலைப் பரிசீலித்து சர்வதேச கண்காணிப்பு தேவை என்று இந்தியா வலியுறுத்த வேண்டும். மாநிலங்களவையில் கூடுதலாக எதையாவது பிரதமர் சொல்வாரா எனப் பார்க்க வேண்டும் என்றார்.

அமெரிக்கா தீர்மானத்தில் தனித்தமிழீழம் கோரி திருத்தம் கொண்டு வர வேண்டும்: ராமதாஸ்!

இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தின் மீது தமிழீழம் கோரி திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பா.மா.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பா.மா.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளிட்டுள்ள அறிக்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், ஈழத்தமிழர் தொடர்பான இந்தியாவின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் இருந்தால் அதை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பு போதுமானதல்ல என்றும் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதாக இந்தியா வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் கூறியிருப்பதை போன்று இலங்கையில் உள்ள தமிழர்கள் சுயமரியாதை, கண்ணியம் ஆகியவற்றுடன் வாழ்வதற்கு தனித் தமிழீழம் அமைப்பதே ஒரே தீர்வு என்று கூறியுள்ளார். இதற்காக உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே ஐ.நா. அமைப்பின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான பிரிவை அமெரிக்க தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தனித்தமிழீழம் அமைப்பதுதான் தென் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமையும் என்று தனது அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியாவின் முடிவைப் பின்பற்ற பல்வேறு நாடுகள் முடிவு!

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளது ஜெனிவாவில் இலங்கையின் ராஜதந்திர முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் விவாதத்துக்கு எடுக்கப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தீர்மானத்தை முறியடிக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியாவின் முடிவு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அணுகுமுறையை பார்த்து வாக்கெடுப்பின் போது முடிவைத் தீர்மானிக்கத் திட்டமிட்டிருந்த பல நாடுகளின் ஆதரவை இலங்கை இழக்கும் நிலை இப்போது உருவாகியுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தீர்மானத்தை தோற்கடிக்கத் தேவையான வாக்குகளைப் பெறும் இலங்கையின் இறுதி நேர முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜெனிவாவில் உள்ள கொழும்பு ஆங்கில ஊடகச் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment