Thursday, March 22, 2012இலங்கை::சர்வதேச நாடுகள் எம்மீது இவ்வளவு இறுக்கமான நடவடிக்கையை மேற்கொள்ள நாம் செய்த தவறு என்னவென்று புரியவில்லையென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.
கண்டி கெட்டம்பேயிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ தகவல் தொழில்நுட்ப கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இதன் பின்னணியில் இரகசியமொன்று இருப்பது தெளிவாகின்றது. எமது தாய்நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு. அதுவே இக்கட்டான இந்நேரத்தில் நாம் பொறுமை காப்பதாகும். தற்போது சர்வதேச ரீதியாக எமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்திற்கு எதிராக சகல அரசியல்க் கட்சிகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகளினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள சூழ்ச்சியை எதிர்கொள்ள நாம் தயாராகியுள்ளோம். 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்' சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அரசாங்கம் தற்போது ஆராய்ந்து வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' அறிக்கையை மூன்று பிரிவுகளின் அடிப்படையில் தற்போது ஆராய்ந்து வருகிறார்.
அரசியல் ரீதியில் எமக்கிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாடு என்ற வகையில் எமக்கு எதிராக ஏதாவது சவால்கள் ஏற்படுமாயின் அதனை எதிர்கொண்டு வெற்றி பெற அனைவரும் ஒரு பொதுநோக்கத்தின் கீழ் இணையவேண்டும். இதனைத் தவிர வேறெந்த வழியும் கிடையாது.
நாட்டில் தலைவர்கள் மாறலாம். கட்சிகள் மாறலாம். அரசாங்கங்கள் மாறலாம். வெற்றி, தோல்விகள் ஏற்படலாம். ஆனால் எமது இறைமை, சுதந்திரம், தன்னாதிக்கம் என்பவை பாதுகாக்கப்பட வேண்டும்' என்றார்
No comments:
Post a Comment