Thursday, March 1, 2012

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்!

Thursday, March 01, 2012
ராமேஸ்வரம்::கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். 10 படகு மற்றும் வலைகளை வெட்டி சேதப்படுத்தினர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 586 விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இன்று அதிகாலை 2.30 மணி யளவில் கச்சத்தீவு அருகே 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 பைபர் படகுகளில் இலங்கை கடற்படையினர் திடீரென வந்தனர். ராமேஸ்வரம் மீனவர்களை பார்த்ததும் அவர்களை திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனர். அவர்களது எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் வலைகளை அடுக்கிக் கொண்டிருந்தனர். அப்போது படகுகள் அருகே விரைந்து வந்த இலங்கை கடற்படையினர் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை நீண்ட கத்தியால் அறுத்து எறிந்தனர். படகுகளின் பலகைகளை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர். பின்னர் எங்கள் எல்லைக்குள் வராதீர்கள் என கடுமையாக எச்சரித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் குறைவான மீன்களுடன் ராமேஸ்வரம் திரும்பினர். கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா நாளை மறுநாள் நடக்க உள்ளது. ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அங்கு செல்கின்றனர். கடந்த மாதம் 25ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை 5 விசைப் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். இந்திய தூதரக அதிகாரிகள், தமிழக அரசு வேண்டுகோளின்படி மீனவர்கள் விடுவிக்கப்பட்டு நேற்றிரவு ராமேஸ்வரம் திரும்பினர். இந்நிலையில் இன்று அதிகாலை இலங்கை கடற்படை நடவடிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment