Saturday, March 24, 2012

ஊழலை ஒழிக்க வேண்டும் இந்தியா, சீனாவுக்கு ஹிலாரி கிளின்டன் அழைப்பு!!!

Saturday, March 24, 2012
வாஷிங்டன்::முக்கியமான சேவைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் நடப்பதை தடுக்க, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பில் இந்தியாவும் சீனாவும் உறுப்பினர்களாக வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வலியுறுத்தி உள்ளார்.பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (ஓஇசிடி) உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த அமைப்பில் 38 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலக நாடுகளின் பொருளாதார பிரச்னை, சுற்றுச்சூழல், கல்வி போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்து இந்த அமைப்பு புள்ளிவிவரங்கள் திரட்டி பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள், கொள்கைகளை வகுத்து கொடுக்கிறது. இந்த அமைப்பில் இந்தியாவும் சீனாவும் சேர வேண்டும் என்று ஹிலாரி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து ஹிலாரி நேற்று கூறியதாவது:
வளர்ந்து வரும் நாடுகளில் ஊழல் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. முக்கியமான சேவைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் நடப்பதால் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, ஊழலை தடுக்கும் நோக்கில் ஓஇசிடி செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் கம்பெனிகள் சர்வதேச அளவில் வர்த்தக பரிவர்த்தனை நடத்தும் போது ஊழல் நடக்காமல் தடுக்க வகை செய்யும். ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் மூலம் தடை கொண்டு வர இயலும்.எனவே, பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் இந்தியா, சீனா, இந்தோனேசியா, சவுதி அரேபியா போன்ற நாடுகளும் இந்த அமைப்பில் சேர வேண்டும் என்று கூறிவருகிறோம்.

No comments:

Post a Comment