Monday, March 26, 2012இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணையை, கட்சியின் மத்திய குழுவில் விவாதிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில், மேற்கொள்ளக் கூடிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில், இன்று கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேசரீதியாக முன்வைக்கப்படுகின்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், இதன் போது பேசப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை அமுலாக்க வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில், மக்கள் கருத்துக் கணிப்பை மேற்கொள்ள அரசாங்கம் தீhமானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் எமது செய்திப்பிரிவு வினவியது.
இது தொடர்பிலும் இன்றைய கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்டமைக்கு, இந்தியாவின் தீர்மானமே காரணம் என வெளியுறவுகள்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்துள்ளார்.
இந்த பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த திங்கட் கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருந்த ஏனைய நாடுகளும், தமது தீர்மானத்தை மாற்றிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு ஆதரவான சில நாடுகள் இந்தியாவின் அறிவிப்பால், வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment