Tuesday, March 20, 2012வள்ளியூர்::தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு பிறகு, கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று முதல் செயல்பட தொடங்கியது. கடந்த 7 மாதங்களாக அணுமின் நிலையத்துக்குள் செல்லாமல் இருந்த ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இதனால் துணை ராணுவத்தினர் அணுமின் நிலைய பகுதியை சுற்றிவளைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதம் இருக்கும் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சரணடைய போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையம் உலகிலேயே மிகமிக பாதுகாப்பானது என்று மத்திய, மாநில அரசு நிபுணர் குழுக்கள் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தன. எனினும், போராட்டக்காரர்கள் அதை ஏற்கவில்லை. இதனால் அணுமின் நிலைய செயல்பாடு முடங்கியது. ஊழியர்கள் தங்கள் ஊருக்கு சென்றனர். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை, அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்க முடிவு செய்தது. மேலும் அப்பகுதி வளர்ச்சிக்கு ரூ.500 கோடியும் ஒதுக்கியது.
இதையடுத்து அணுமின் நிலையம் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் அதிரடியாக எடுக்கப்பட்டன. துணை ராணுவ படையினர் மற்றும் 10 ஆயிரம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் அணுமின் நிலையம் கொண்டு வரப்பட்டது. அணுமின் நிலைய வளாகம், ஊழியர் குடியிருப்பு, நுழைவு வாயில் பகுதிகளில் ராணுவ வீரர்களும் போலீசாரும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஏடிஜிபி ஜார்ஜ் இன்று டிஐஜி, எஸ்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த 7 மாதங்களாக பணிக்கு செல்ல முடியாமல் இருந்த அணுமின் நிலைய ஊழியர்களுக்கு நேற்றே தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 100 ரஷ்ய விஞ்ஞானிகள், 600 தொழில்நுட்ப வல்லுனர்கள், 250 ஊழியர்கள் உள்பட ஆயிரம் பேர் இன்று காலை உற்சாகமாக அணுமின் நிலையத்துக்குள் சென்றனர். இதையடுத்து அணுமின் நிலையத்தில் பணிகள் தொடங்கியதாக தகவல்கள் வெளியாயின.
இதற்கிடையில், நேற்று அதிகாலையில் இருந்து மத்திய துணை ராணுவ படையினர், தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்திய போராட்ட குழுவை சேர்ந்த சிவசுப்பிரமணியன், ராஜலிங்கம், ஜேம்ஸ், தேங்காய் கணேசன், அன்னராஜ், சுயம்பு, அப்பு குருசாமி, செந்தூர் பாண்டியன், ஆதிலிங்கம், சக்திவேல், முருகன் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தங்குளி, தோமையார்புரம், பெருமணல் ஆகிய பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. ஆலய மணியடித்து அனைவரும் இடிந்தகரை உண்ணாவிரத பந்தலுக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். அதன்படி ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் நடந்தே உண்ணாவிரத பந்தலுக்கு வந்தனர். கூட்டப்புளியில் இருந்து இடிந்தகரை நோக்கி வந்த 186 பேர் கைது செய்யப்பட்டனர். 500 பெண்கள் கூட்டப்புளி விலக்கில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் கடற்கரை வழியாக யாரும் உள்ளே நுழைய முடியாமல் தடுக்க கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடற்படை விமானமும், படகுகளும் ரோந்து பணியில் ஈடுபட்டன. இந்நிலையில் கடற்கரை பகுதியில் துணை ராணுவ படையினர் நேற்று விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். அஞ்சுகிராமம் முதல் உவரி வரை சாலையில் போலீசார் தடுப்புகள் அமைத்தனர். ஆத்திரமடைந்த இடிந்தகரை பகுதியில் மக்கள் ஆயுதங்களுடன் குவிந்தனர். இடிந்தகரை லூர்து மாதா ஆலயம் முன்பு உண்ணாவிரத பந்தலுக்குள் போலீசார் நுழைவதை தடுக்க ஆயுதம் தாங்கிய வாலிபர்கள் நின்றுள்ளனர்.
மேலும் விஜயாபதி&இடிந்தகரை சாலை, வைராவி கிணறு&இடிந்தகரை ஆகிய இடங்களில் இன்று காலை முட்கள் மற்றும் கற்களை குவித்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இடிந்தகரையில் அரசை கண்டித்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், உறுப்பினர் புஷ்பராயன் உள்ளிட்டோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதற்கிடையே நேற்றிரவு 10 மணி முதல் 12 மணி வரை போராட்ட குழுவை சேர்ந்த 6 பேர் அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர். இன்று பிற்பகல் அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த 7 மாதங்களாக நடந்த போராட்டம் தொடர்பாக போராட்ட குழுவினர் மீது நூற்றுக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், நேற்று நள்ளிரவு முதல் கூடங்குளம், செட்டிகுளம் கிராமங்களில் வீடு வீடாக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் கூடங்குளத்தை சேர்ந்த அருள், சூரியநாராயணன், செட்டிகுளம் தங்கமணி, ஜவஹர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 3 ஆயிரம் பேர் மத்தியில் உதயகுமாரும், புஷ்பராயனும் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களை கைது செய்தால் போலீஸ் & பொதுமக்கள் இடையே வன்முறை வெடிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக சரண் அடையும்படி உதயகுமாரை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
போலீசார் விடுத்த எச்சரிக்கையில், ‘‘கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவின்படி உங்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் மத்தியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் நீங்கள் அதை கைவிட்டு கூட்டத்தை விட்டு வெளியே வந்து போலீசில் சரண் அடையுங்கள். வீண் பிடிவாதம் வேண்டாம்ÕÕ என்று தெரிவித்துள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் அவரை போலீசார் கைது செய்யலாம் என்று தெரிகிறது. அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க கூடங்குளம் பகுதிக்கு செல்லும் அனைத்து ரோட்டையும் போலீசார் மூடி விட்டனர்.
இடிந்தகரைக்கு சென்ற எஸ்பி மீது கல்வீச்சு
நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதரி தலைமையில் 3 அத¤ரடி படை வாகனங்களில் போலீசார் இடிந்தகரை அருகில் உள்ள சுனாமி காலனிக்கு இன்று காலை சென்றனர். போலீஸ் வாகனம் ஊருக்குள் வருவதை கண்ட 500க்கும் அதிகமான கிராம மக்கள் திரண்டனர். வாகனங்களை தடுத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென எஸ்பி மற்றும் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். நிலைமை விபரீதமானதால் உயர் அதிகாரிகளுக்கு எஸ்பி தகவல் தெரிவித்தார். பின்னர். அதிரடி படை வாகனங்கள் திரும்பி சென்றன. போலீஸ் வாகனங்கள் திரும்பிய பின் கற்கள், ஜல்லிகள், முட்செடிகளை வெட்டி போட்டு சாலைகளை அடைத்துள்ளனர். இதனால் கடலோர கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
விரைவில் மின்உற்பத்தி காசிநாத் பாலாஜி பேட்டி
கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் அணு மின் நிலைய பணிக்கு 100 ரஷ்ய விஞ¢ஞானிகள் உள்பட 1000 பேர் இன்று காலை பணிக்கு வந்துள்ளனர். இவர்கள் காலை 7.30 மணி, 8 மணி, 8.30 மணி என மூன்று ஷிப்ட¢களில் பணி புரிகின்றனர்.
அணு மின் நிலைய பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து வெளியூருக்கு சென்ற ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் உடனடியாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடனே பணிக்கு திரும்புவார்கள் என நம்புகிறேன.
அணு மின் நிலைய பணிகளை இரவு, பகலாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இதற்காக யாரும் விடுப்பு எதுவும் இல்லாமல் பணியாற்றுவோம். வெகு விரைவில் மின் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணு மின் நிலையத்தை திறக்க அனுமதி அளித்த பிரதமர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு இந¢திய அணுசக்தி கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு காசிநாத் பாலாஜி கூறினார்.
ஜெயலலிதா படம் எரிப்பு
அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரின் கோரிக்கைகள் தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநில அரசு தங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தருகிறது என்று அவர்கள் நினைத்தனர். அப்பகுதி மக்களும் அவ்வாறே நம்பினர். ஆனால், அணுமின் நிலையத்தை செயல்படுத்த தமிழக அமைச்சரவை நேற்று முடிவெடுத்தது. இதையடுத்து கடலோர கிராமங்களில் ஏராளமான மீனவர்கள் இடிந்தகரையில் திரண்டனர்.
இந்நிலையில், அதிமுக உறுப்பினர் தமிழரசி, ஜெயலலிதா படத்துடன் வைத்திருந்த கட்சி உறுப்பினர் அட்டையை தீயிட்டு கொளுத்தினார். கணவரின் அட்டையையும் எரித்தார். அதை பார்த்து அதிமுகவினர் பலர் தங்கள் உறுப்பினர் அட்டையை எரித்தனர்.
No comments:
Post a Comment