Monday, March 26, 2012

11 வருடங்களுக்கு முன் நடந்த அ.புரம் விமான விபத்துக்கு புலிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலே காரணம்!

Monday, March 26, 2012
இலங்கை::2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி அநுராதபுரம் - வீரவெவ பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தமை தொடர்பில் புதிய பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் இரு ரஷ்ய பிரஜைகளை ஏற்றிச் சென்றபோதே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.

விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப சிக்கலே விபத்துக்கான காரணம் என விசாரணைகள் மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அண்மையில் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட புலி சந்தேகநபர்கள் இருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விமான விபத்து குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விமானம் புலிகள் இயக்கம் வில்பத்து வனப் பகுதியில் பதுங்கியிருந்து மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் காரணமாகவே விழுந்து விபத்துக்குள்ளானதாக கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணையின் பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமான விபத்து தொடர்பான வழக்கு இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment