Friday, February 24, 2012

விரிவான செயற்பாட்டுத் திட்டமொன்றை இலங்கையிடம் அவதானிக்க முடியவில்லை-அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி ஊடகப் பேச்சாளர் மார்க் சீ.டோனர்!

Friday, February 24, 2012
நிவ்யோர்க்::கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்கின்ற போதிலும் அதிலுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பான விரிவான செயற்பாட்டுத் திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி ஊடகப் பேச்சாளர் மார்க் சீ.டோனர் இதனைக் கூறியுள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புடைமை தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமெரிக்கா வரவேற்பதாக இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது இலங்கைக்குள் இருந்து வெளியான ஒரு ஆவணமாகும் என்பதால், அதன் பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டால் உரிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உறுதுணையாக அமையும் எனவும் டோனர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையில் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் வலுவடைந்து வருகின்ற போதிலும் விரிவான செயற்பாட்டுத் திட்டமொன்றை இதுவரை இலங்கை அரசாங்கத்திடம் அவதானிக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தேவையான உறுதியான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை அரசாங்கத்தினை உற்சாகப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று நல்லிணக்கத்துடன் தொடர்புடைய முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரேரணையொன்றை சமர்ப்பிப்பதற்காக ஜெனீவாவிலுள்ள தமது சகாக்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறுகின்றது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை காண்பதற்கு ஆவல் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட டோனர் அவை நல்லிணக்கத்திற்கு வித்திடுவதாக அமையும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை காலதாமதமின்றி செயற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஊக்கமளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பகிர்வு, காணிப் பகிர்வு, நிறுவனங்களின் சுயாதீனத் தன்மை மற்றும் ஊடக சுதந்திரம் போன்ற விடயங்களை உள்ளடக்கிய தேசிய நல்லிணக்க செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அதன் மூலம் பங்களிப்பு வழங்க முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்தாமை கவலைக்குரிய விடயம் என அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment