Tuesday, February 14, 2012சென்னை::சென்னையில் காதலர் தினம் இன்று களை கட்டியது. காதலர்கள் ஒருவருக்கொருவர் முத்த மழை பொழிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் (வேலண்டைன்ஸ் டே) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வழக்கத்துக்கு மாறாக காதலர் தினம் இந்தாண்டு களை கட்டியது. சுற்றுலா தலங்கள், கடற்கரையில் இளம் ஜோடிகள் பெருமளவில் குவிந்தனர். தங்களது அன்பை வெளிப்படுத்தும்விதமாக வாழ்த்து அட்டை, ரோஜா பூ, சாக்லெட் உள்ளிட்டவற்றை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை வழங்கியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். சில காதல் ஜோடிகள் கட்டி அணைத்து உதட்டோடு, உதடு வைத்து முத்த மழை பொழிந்தனர். சென்னையில் காதலர் தினம் காலை 6 மணி முதலே களை கட்ட தொடங்கியது. குறிப்பாக மெரினா, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள், ஷாப்பிங் மால்களில் காதலர்கள் ஜோடிகளாக உலா வந்த வண்ணம் இருந்தனர்.
நேரம் ஆக, ஆக எங்கும் காதலர்களாகவே காட்சியளித்தனர். காதலர்களை நேரில் பார்க்க முடியாதவர்கள் தங்கள் மனதுக்கு பிடித்தமானவர்களுக்கு காதல் ரசம் சொட்ட சொட்ட வசனங்கள், கிளுகிளுப்பான காதல் வரிகளை இமெயில் மற்றும் செல்போன் எஸ்.எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பினர். காதலர் தினத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதனால், வீபரிதங்கள் நிகழாமல் இருக்க சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெண்களை கிண்டல் செய்பவர்களை தடுக்க மாறு வேடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அது மட்டுமல்லாமல் காதலர் தினத்தை வரவேற்கும் வகையில் சென்னையில் பல்வேறு ஓட்டல்களில் கலை நிகழ்ச்சிகள், பார்ட்டிகள் தடபுடலாக நடந்தன. சில இடங்களில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தங்கள் திருமண நாளை கொண்டாடும்விதமாக பீச், பார்க்குகளில் வலம் வந்ததை காண முடிந்தது.
களைகட்டியது ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகுத்துறை, ரோஜா பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களில் காலை குளிரை பொருட்படுத்தாமல் ஏராளமான காதல் ஜோடிகள் நடமாடினர். வெளிநாட்டு ஜோடிகள் பலர் பொது இடத்திலேயே உதடுகளில் முத்தம் பதித்து கொண்டனர். காதலர்கள் நடமாட்டத்தால் சுற்றுலா தலங்கள் களை கட்டின. ஊட்டிக்கு ரோஜா மலர்கள் வெளியிடங்களில் இருந்தே விற்பனைக்கு வருகிறது. ஓசூர், பெங்களூர், தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சிவப்பு ரோஜாக்கள் விற்பனைக்கு வந்திருந்தன. இன்று ஒரு ரோஜா விலை குறைந்தபட்சம் ரூ.30 முதல் அதிகபட்சம் ரூ.50 வரையும் விற்றது.
No comments:
Post a Comment