Sunday, February 26, 2012

கோவையில் அதிகாலை பரபரப்பு பா.ஜ. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு!

Sunday, February 26, 2012
கோவை::கோவை குறிச்சியில் பா.ஜ. அலுவலகம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் சங்கம் வீதியில் பாரதிய ஜனதா கட்சியின் குறிச்சி நகர தலைமை அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் யாரோ மர்மநபர்கள், பா.ஜ. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு சென்றுள்ளனர். இதில் அலுவலகத்தின் முன்புறம் தீ பற்றி எரிந்தது. அப்பகுதியில் சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தண்ணீரை ஊற்றி சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். தகவல் அறிந்து வந்த குறிச்சி நகர பாஜ தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் குறிச்சி நகர நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்யக்கோரி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிந்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment