Wednesday, February 15, 2012சென்னை::சென்னையில் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உலகம் முழுவதும் காதலர் தினம் (வேலண்டைன்ஸ் டே) நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வழக்கத்துக்கு மாறாக காதலர் தினம் இந்த ஆண்டு களை கட்டியது. சுற்றுலா தலங்கள், கடற்கரையில் இளம் ஜோடிகள் பெருமளவில் குவிந்தனர். தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக வாழ்த்து அட்டை, ரோஜா பூ, சாக்லெட் உள்ளிட்டவற்றை வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
ஒருவருக்கொருவர் ‘இதயம்’ படம் போட்ட மோதிரம், கை செயின் போன்ற விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கியும், தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். சில காதல் ஜோடிகள் கட்டி அணைத்து உதட்டோடு, உதடு வைத்து முத்த மழை பொழிந்தனர். சென்னையில் காதலர் தினம் காலை 6 மணி முதலே களை கட்டத் தொடங்கியது. குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்களில் காதலர்கள் ஜோடிகளாக உலா வந்த வண்ணம் இருந்தனர்.
நேரம் ஆக, ஆக எங்கும் காதலர்களாகவே காட்சியளித்தனர். காதலர்களை நேரில் பார்க்க முடியாதவர்கள், தங்கள் மனதுக்கு பிடித்தமானவர்களுக்கு காதல் ரசம் சொட்ட சொட்ட வசனங்கள், கிளுகிளுப்பான காதல் வரிகளை இமெயில் மற்றும் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பினர். காதலர் தினத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதனால், விபரீதங்கள் நிகழாமல் இருக்க சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெண்களை கிண்டல் செய்பவர்களை தடுக்க, மாறு வேடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அது மட்டுமல்லாமல் காதலர் தினத்தை வரவேற்கும் வகையில், சென்னையில் பல்வேறு ஓட்டல்களில் கலை நிகழ்ச்சிகள், பார்ட்டிகள் தடபுடலாக நடந்தன. சில இடங்களில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள், தங்கள் திருமண நாளை கொண்டாடும் விதமாக கடற்கரை, பூங்காக்களில் வலம் வந்ததை காண முடிந்தது. அலுவலகங்கள் மற்றும் கல்லூரி, பள்ளிகள் நேற்று இயங்கியதால், ஏராளமான காதல் ஜோடிகள் ‘விடுமுறை’ எடுத்து கொண்டு, காதலர் தினத்தை கொண்டாடினர்.
காதலர்கள் ஏமாற்றம்
சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்காக்களுக்கு நேற்று விடுமுறை நாள் ஆகும். காதலர் தினம் என்பதால் ஏராளமான காதல் ஜோடிகள், நேற்று காலை இங்கு படையெடுக்க தொடங்கினர். பூங்காக்களுக்கு விடுமுறை என்று தெரிந்த பின்னர், காதலர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
No comments:
Post a Comment