Monday, February 13, 2012

பாக்.வெளியுறவு அமைச்சரிடம் போனில் ஆபாசமாகப் பேசினாரா கர்நாடக இளைஞர்?

Monday, February 13, 2012
ரெய்ச்சூர்::கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கர்-ஐ அவரது செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாக சிக்கலில் மாட்டியுள்ளார். அந்த இளைஞரை போலீஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அமைச்சர் ஹீனாவின் செல்போனுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஆபாச வார்த்தைகளில் உரையாடியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்தபோது அது இந்தியாவிலிருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியபோது, ரெய்ச்சூர் மாவட்டம் சித்தானூர் தாலுகாவைச் சேர்ந்த புத்தினி என்ற குக்கிராமத்திலிருந்து அந்த அழைப்பு வந்தது தெரிய வந்தது.

கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை அந்த நபர் ஆபாசன வார்த்தைகளில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இதுகுறித்து இந்திய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். மத்திய அரசின் உத்தரவின் பேரில், பெங்களூர் மத்திய குற்றப் பிரிவு போலீஸ் படையைச் சேர்ந்த ஒரு பிரிவினர் புத்தினி கிராமத்திற்கு விரைந்தனர். அங்கு அந்த செல்போனுக்குரிய இளைஞரைப் பிடித்து ரெய்ச்சூர் கொண்டு வந்தனர்.அங்கு அவரிடம் நேற்று நீண்ட நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

சிக்கலில் மாட்டியுள்ள அந்த நபரின் பெயர் அமரேஷ். இந்த விசாரணை குறித்து அமரேஷ் கூறுகையில், ஹீனா ரப்பானி கர் என்ற பெயரை நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. மேலும் எனக்கு உருதும் பேசத் தெரியாது, ஆங்கிலமும் பேசத் தெரியாது. என்ன நடந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை, புரியவில்லை.

நான் ஒரு தனியார் பயிற்சி நிலையத்தில் பணியாற்றி வருகிறேன். ஒரு வேளை எனது நிலையத்திற்குப் படிக்க வரும் யாரேனும் இதைச் செய்திருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன் என்றார்.

தீவிர விசாரணைக்குப் பின்னர் தற்போது அமரேஷை போலீஸார் விடுவித்துள்ளனர். இருப்பினும் மறு உத்தரவு வரும் வரை உங்களது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்யக் கூடாது என்று அவருக்கு போலீஸார் உத்தரவிட்டுள்ளனராம்.

No comments:

Post a Comment