Thursday, February 16, 2012

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சிறப்பு சுற்றுக்காவல்படை அமைப்பு!

Thursday, February 16, 2012
சென்னை::ரேஷன் அரிசி பக்கத்து மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் எல்லையோர மாவட்டங்களில் சிறப்பு சுற்றுக்காவல் படைகளை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தமிழக ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர ஆதரவற்றோருக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசியை சிலர் ரேஷன் ஊழியர்கள் உதவியோடு மூட்டை மூட்டையாக கடத்துகின்றனர். இந்த அரிசி பாலிஷ் செய்யப்பட்டு உயர் ரக அரிசி போல கிலோ க்ஷீ 30 வரை விற்கப்படுகிறது.

மேலும் தமிழகத்துக்கு பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் தமிழகத்தை விட அரிசி விலை அதிகம் என்பதால் இங்கு இலவசமாக கிடைக்கும் அரிசியை சிலர் வாங்கி பக்கத்து மாநிலங்களில் விற்பனை செய்கின்றனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளபோதும், அவர்கள் கண்ணை மறைத்து கடத்தலில் கொடி கட்டிப்பறக்கின்றனர்.

வருவாய்த்துறையினரும் அவ்வவ்போது ரெய்டு நடத்தி வருகின்றனர். மாநில எல்லைகளான ஓசூர் (தமிழக & கர்நாடகா எல்லை), காட்பாடி (தமிழக & ஆந்திரா எல்லை), கோவை (தமிழக & கேரள எல்லை), போன்ற எல்லைகளின் வழியேதான் அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது என்ற நிலையில் இப்பகுதிகளில் செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன தணிக்கை நடத்தப்படுகிறது. மூட்டை மூட்டையாக அரிசியும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலும் தவிர்க்கும் வகையில் சிறப்பு சுற்றுக்காவல் படைகளை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த சிறப்பு சுற்றுக்காவல் படைகள் அமைக்கப்படுகின்றன. இந்த படையினருக்கு வாகனங்களில் தீவிர ரோந்து பணி, கண்காணிப்பு பணி போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் இல்லாமல் எந்நேரமும் ரோந்திலேயே இருக்கும் வகையில் இந்த சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1 கோடியே 36 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பொள்ளாச்சி பகுதியில் அரிசி கடத்தலை தவிர்க்கும் வகையில் சிவில் சப்ளை சிஐடி சார்பில் புதிய பிரிவை துவக்கவும் அரசு உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

No comments:

Post a Comment