Wednesday,February 22,2012இலங்கை::வட மாகாண உதவிக்கான ஐ. நா. கூட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
கொழும்பிலுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வின் போது அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னிலையில் அரசாங்கத் திற்கும் ஐ. நாவுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
அரசாங்கத்தின் சார்பில் வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் எஸ். பி. திவாரட்ண, ஐ.நா. சார்பில் அதன் பிரதி நிதி சுய்னே நன்டி ஆகியோரும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
2013 தொடக்கம் - 2018 வரையான ஐந்தாண்டு காலத்திற்கு வட மாகாணத் திற்கு உதவி வழங்கும் வகையிலேயே இந்த ஒப்பந் தம் கைச்சாத்திடப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திர சிறி தினகரனுக்குத் தெரிவித்தார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கே இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளது.
மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்தல், வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், அபிவிருத்தித் திட்டங்கள் இந்த நிதியுதவி மூலம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜேலட்சுமி தினகரனுக்குத் தெரிவித்தார்.
இதேவேளை, வட மாகாண மக்களின் நலன் கருதி மேலும் பல்வேறு திட்டங்கள் வட மாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் கலந்து கொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வடக்கை அபிவிருத்தி செய்யும் பணிகளில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
விவசாயம், கால் நடை, மீன்பிடி, மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட பலதுறைகள் இந்த ஒப்பந்த மூலம் வடக்கில் அபிவிருத்தி செய்யப் படவுள்ளன. உலக உணவுத் திட்டத்திற்கு இலங்கை ஐநூறு மெற்றிக் தொன் நெல்லை வழங்கும் எனவும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு இவ்வைபவத்தில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment