Friday, February 17, 2012நித்திரவிளை::நடுக்கடலில் துப்பாக்கியால் சுட்டு 2 குமரி மீனவர்கள் பலியான விவகாரம் தொடர்பாக இத்தாலி கப்பல் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியை சேர்ந்தவர் பிரடி (30). இவருக்கு சொந்தமான செயின்ட் ஆன்டனி என்ற விசைப்படகில் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கேரளாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். 10 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் சக்திக்குளங்கரை என்ற இடத்தில் இருந்து பிரடி, இரயுமன்துறையை சேர்ந்த அஜீஸ்பிங்கி (20), குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த செலஸ்டின் உள்பட 12 பேர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் மாலை கொல்லம் அருகே 35 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்தனர். அந்த வழியாக இத்தாலி சரக்கு கப்பல் வந்துள்ளது. கப்பலில் இருந்தவர்கள் திடீரென படகில் இருந்த மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். படகை ஓட்டி சென்ற செலஸ்டின் (45), அருகில் இருந்த அஜீஸ்பிங்கி பரிதாபமாக பலியாயினர்.
தகவல் அறிந்த இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு படையினர் உடனடியாக இத்தாலி கப்பலை மடக்கி கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். துப்பாக்கி சூட்டில் பலியான 2 மீனவர்களின் உடல்களும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பிறகு, உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பலியான அஜிஸ்பிங்கி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் 2 மீனவர் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளார். இதற்கிடையே, இந்திய எல்லையில் அத்துமீறி நடந்துகொண்டு மீனவர்களை சுட்டுக் கொன்றது தொடர்பாக கொச்சி மட்டாஞ்சேரி போலீசாரும் கடலோர பாதுகாப்பு படையினரும் இத்தாலி கப்பல் கேப்டன் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். கப்பலில் இருந்த ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேப்டன் மற்றும் பாதுகாவலர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
விசாரணைக்கு தயார் இத்தாலி தூதர் விளக்கம் மீனவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக இத்தாலி அரசுக்கு தூதரகம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் மத்திய வெளியுறவு துறை செயலாளர் கணபதியிடம் இத்தாலி தூதர் கியாக்கோமோ சான் பெலைஸ் டி மோண்டோ நேரில் விளக்கம் அளித்தார். ‘‘கொல்லம் அருகே கடலில் இந்திய மீனவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு துரதிர்ஷ்டவசமானது. சர்வதேச சட்டத்தை மீறி கப்பல் ஊழியர்கள் எதுவும் செய்யவில்லை. பலமுறை அவர்கள் எச்சரிக்கை செய்தும், அந்த படகு கப்பலை நோக்கி வேகமாக வந்துள்ளது. இதனால் கடல் கொள்ளையர்கள் என நினைத்து கப்பல் பாதுகாப்பு ஊழியர்கள் சுட்டுள்ளனர். இது தொடர்பாக இந்தியாவின் எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க தயார்’’ என்று கூறியுள்ளார்.
‘படுத்ததால் பிழைத்தோம்’ மீனவர்கள் பேட்டி
துப்பாக்கிசூடு பற்றி படகு உரிமையாளர் பிரடி கூறியதாவது: எங்கள் படகில் மொத்தம் 11 பேர். நேற்று முன்தினம் மதியம் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு படகின் உள்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்தோம். செலஸ்டின் ஓட்டிக்கொண்டிருந்தார். மேல் தட்டில் பிங்கி உட்கார்ந்திருந்தார். மாலை 4.30 மணியளவில் செலஸ்டினின் அலறல் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்தோம். படகின் ஸ்டியரிங் இடையில் ரத்த வெள்ளத்தில் செலஸ்டின் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கப்பலில் இருந்து சரமாரியாக துப்பாக்கி குண்டுகள் எங்களை நோக்கி வந்தது. ‘படுத்துக்கொள்ளுங்கள்’ என்று கத்தினேன். எல்லாரும் படுத்தோம். ஓட்டிக்கொண்டிருந்த செலஸ்டின் அங்கேயே சரிந்து விழுந்ததால், படகு கட்டுப்பாட்டை இழந்து கப்பல் அருகே போனது. நான் வேகமாக சென்று வேறு திசைக்கு திருப்பினேன். பிங்கி மீதும் குண்டு பாய்ந்தது. உயிருக்கு போராடினார். குண்டுகள் சரமாரியாக பாய்ந்ததால் அவர் அருகில் எங்களால் போக முடியவில்லை. சிறிது நேரத்தில் இருவருமே இறந்துவிட்டனர்.
No comments:
Post a Comment