Monday, February 13, 2012

ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து துவங்குமா? : செயலர் விளக்கம்!

Monday, February 13, 2012
ராமேஸ்வரம்::தனுஷ்கோடி கடல் பகுதியில், சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம் மாற்றுப்பதை குறித்து, நேற்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட பின், மாற்றுப்பாதை குறித்து ஆய்வு செய்வதற்கு, கோர்ட் உத்தரவிட்டது.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பச்சோரி கமிட்டி தனுஷ்கோடி பகுதியில் மாற்றுப்பதை பாதை குறித்து ஆய்வு செய்து, அறிக்கையை கோர்ட்டில் ஒப்படைத்தது. இதன் தொடர்ச்சியாக, நேற்று ராமேஸ்வரம் வந்த மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறை செயலர் மோகன்தாஸ், இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஹோவர்கிராப்ட் கப்பலில், தனுஷ்கோடி மற்றும் ராமர் பாலம் கடல் பகுதிக்குச் சென்று பார்வையிட்டு திரும்பினார். தூத்துக்குடி துறைமுக தலைவரும், சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்ட தலைவருமான சுப்பையா, பொதுச் செயலர் சீனிவாச கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

மாற்றுப்பாதை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின், கப்பல் போக்குவரத்துத் துறை செயலர் மோகன்தாஸ் கூறியதாவது: சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம் மாற்றுப்பாதை குறித்து, குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று ஆய்வு செய்யப்பட்டது. இப்பிரச்னை கோர்ட்டில் இருப்பதால், இது குறித்து விவரம் எதுவும் கூற முடியாது. தூத்துக்குடி - கொழும்பு கப்பல் போக்குவரத்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் துவக்கப்படும்.

ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து ஏற்கனவே திட்டத்தில் உள்ளது. இதற்கான துறைமுகங்களை தமிழக அரசு ஏற்படுத்தி, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தினால், மீண்டும் கப்பல் போக்குவரத்து நடத்தலாம் என்றார். முன்னதாக, ராமநாத சுவாமி கோவிலுக்குச் சென்று சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

No comments:

Post a Comment