Thursday, February 23, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் நகல் யோசனை வெளியாகியுள்ளது!

Thursday, February 23, 2012
நிவ்யோர்க்::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள நகல் யோசனைத் திட்டம் வெளியாகியுள்ளது.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக அரசாங்கங்கள் பின்பற்ற வேண்டிய நியதிகள் காணப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் சர்வதேச பிரகடனங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியமானது.

குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்டம், அகதிகள் தொடர்பான சட்டம், மனித உரிமைச் சட்டம் பேன்றன கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு உதவியாக அமையும்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் வரவேற்கப்பட வேண்டியவை.

சட்டவிரோத படுகொலைகள் தொடர்பில் விசாரணை நடத்துதல், வடக்கில் இராணுவ மயப்படுத்தலை தடுத்தல், காணிப் பிரச்சினை தொடர்பில் சுயாதீனமான பொறிமுறைமை ஒன்றை அமைத்து தீர்வு காணல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல், அதிகாரப் பகிர்வின் மூலமான அரசியல் தீர்வுத் திட்டம், கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

எனினும், பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உரிய கவனம் செலுத்த் தவறியுள்ளது.

குறிப்பாக சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படக் கூடிய வகையில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

1. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும். பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்க வேண்டும்.

2. சர்வதேச சட்ட மீறல்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல் ஆகியன தொடர்பில் அடுத்த அமர்வுகளின் போது இலங்கை அரசாங்கம் விரிவான திட்டத்தை முன்வைக்க வேண்டும்.

3. மனித உரிமை மேம்பாடு தொடர்பில் இலங்கைக்கு ஆலோசனை வழங்குதல்.

ஆகிய முக்கிய காரணிகள் இந்த நகல் யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உறுப்பு நாடுகளுக்கு இந்த நகல் யோசனைத் திட்டத்தை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment