Monday, February 27, 2012திருவனந்தபுரம்::இத்தாலி கப்பலில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கொல்லம் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்படுகிறது. இதன்பின்னர் கூடுதல் பரிசோதனைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கிகளை இத்தாலி கப்பலில் சோதனை நடத்தி கைப்பற்ற கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி கொச்சி போலீஸ் கமிஷனர் எம்.ஆர். சிவகுமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் இத்தாலி கப்பலுக்கு புறப்பட்டு சென்றனர்.
கொல்லம் நகர போலீஸ் கமிஷனர் தேபேஸ்குமார் பெகரா, கொல்லம் குற்றப்பிரிவு டிஎஸ்பி சேம் கிறிஸ்டி டேனியல் மற்றும் கடற்படை, கடலோர பாதுகாப்புபடை, சுங்க இலாகா, வருவாய் அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் உட்பட 30 பேர் பரிசோதனைக்காக இத்தாலி கப்பலுக்கு சென்றனர். மேலும் இத்தாலியில் இருந்து வந்த ராணுவ மேஜர்கள், அதிகாரிகள், இத்தாலி அரசு நியமித்து உள்ள கேரளாவை சேர்ந்த வக்கீல் சுஜேஸ்மேனன், மொழிபெயர்ப்பாளர் கில்டன் ஆகியோரும் உடன் சென்றனர்.
மதியம் 12.30 மணியளவில் கப்பலில் பரிசோதனை தொடங்கியது. கப்பலில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த அறை, பயண ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை 3.30 மணிவரை சோதனை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் மிக பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து அவற்றை ஒரு ரகசிய இடத்தில் வைத்தனர். அவை இன்று கொல்லம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து கூடுதல் பரிசோதனைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தியா அடிபணியாது
மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய மீனவர்களை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்றது வேதனையான, துரதிஷ்டவசமான சம்பவமாகும். இந்த வழக்கு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக இத்தாலி அரசின் எந்த நிர்பந்தத்திற்கும் இந்தியா அடிபணியாது. மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் மீது இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கேரள அரசு இந்த வழக்கில் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசின் முழு ஆதரவு உள்ளது. இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் மிகவும் சுதந்திரமாக செயல்பட்டு வருவதால், இந்த வழக்கில் சரியான தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment