Friday, February 10, 2012சென்னை::பஸ் தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டதால் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். கல்வீச்சில் 10க்கும் மேற்பட்ட பயணிகள், போலீசார் என ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாட சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாட நேற்று முடிவு செய்தனர்.
இதையறிந்த சென்னை கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் சேஷசாய், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் பவானீஸ்வரி தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் கந்தசாமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழைத்து கல்லூரி வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். பஸ் தினம் கொண்டாட்டத்தால் ஏற்படும் விளைவுகளை விளக்கினர்.
இந்த சூழ்நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அரும்பாக்கத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், நேற்று மதியம் 12.30 மணி அளவில் கூடினர். அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அங்கிருந்து ஊர்வலமாக கல்லூரி நோக்கி புறப்பட்டனர். அப்போது சில மாணவர்கள் சாலையின் இருபுறத்திலும் உள்ள கடைகளில் இருந்து குளிர்பானம் மற்றும் குடிநீர் கேன்களை எடுத்து சேதப்படுத்தினர். கடைகளை சூறையாடினர். இதனால், அனைத்து கடைகளும் மளமளவென மூடப்பட்டது.
மேலும், அந்த சாலையில் வந்த மாநகர பஸ்களை மறித்து, அதில் ஏற முயன்றனர். இதைக் கண்டித்த பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அவர்களிடமும் மாணவர்கள் தகராறு செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
இந்த சூழ்நிலையில் ஊர்வலமாக வந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் புகுந்தனர். அங்கிருந்த கற்களை எடுத்து போலீசார் மீதும், பஸ்கள் மீதும் சரமாரியாக வீசினர். இதில் போலீஸ் ஜீப் ஒன்று சேதமடைந்தது. மாநகர பஸ் தடம் எண்: 15பி மற்றும் இன்னொரு பஸ்சின் கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கியது. பயணிகள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
கல்வீச்சில் பலர் காயமடைந்தனர். மாணவர்களின் அத்துமீறல்கள் எல்லை தாண்டியதால், போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
கல்வீச்சில் பயணிகள் மோகன்ராஜ் (35), சண்முகம் (45) பிரபு (48) ஆகியோர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸ் தரப்பில் சப் இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, மோகன்ராஜ், பாண்டியன், ராமன், செல்வகுமார் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். செங்குன்றம் குமார் (19), புரசைவாக்கம் சிவலிங்கம் (18), கொண்டித்தோப்பு சந்துரு (20), ஸ்ரீபெரும்புதூர் ஏழுமலை (18), திருவேற்காடு சுரேஷ் (25), மூலக்கொத்தளம் சரத்குமார் (17), காமராஜ் நகர் நெல்சன் (20), எத்திராஜ் (22) உள்ளிட்ட 14 மாணவர்களை கைது செய்து, எழும்பூர் கோர்ட் 14வது நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதறி ஓடிய போலீசார்
கல்லூரி வளாகத்துக்குள் இருந்து பறந்து வந்த பல நூறு கற்களால் பொதுமக்கள் மட்டுமின்றி போலீசாரும் கதிகலங்கினர். பாதுகாப்புக்கு வந்த போலீசார், கல்வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், ஒரு கட்டத்தில் அவர்களும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதும் கற்கள் சிதறிக்கிடந்தன. அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.
குழந்தையை காப்பாற்றிய போலீஸ்காரர்
இந்த களேபரத்தில் கல்வீச்சை தாக்குபிடிக்க முடியாத பெண் பயணி ஒருவர், தனது ஒரு வயது குழந்தையை காப்பாற்றுவதற்காக கதறியபடி பஸ்சில் இருந்து ஜன்னல் வழியாக குழந்தையை வெளியே வீசினார். அதை போலீஸ்காரர் ஒருவர் பத்திரமாக பிடித்தார். பின்னர், கல் அடியில் இருந்து குழந்தையை பாதுகாக்க, தனது ஹெல்மெட்டை கழற்றி குழந்தை மீது வைத்தார். பின்னர், மின்னல் வேகத்தில் அந்த இடத்தை விட்டு குழந்தையுடன் பாதுகாப்பான இடத்துக்கு ஓடினார். பின்னர், தாயிடம் குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தார். இதற்கு அவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment