Tuesday, February 14, 2012

கோலாலம்பூருக்கு கடத்த இருந்த ரூ 50 லட்சம் போதை மாத்திரை ஏர்போர்ட்டில் பறிமுதல்!

Tuesday, February 14, 2012
மீனம்பாக்கம்::கோலாலம்பூருக்கு கடத்த இருந்த ரூ.50 லட்சம் போதை மாத்திரைகள் விமான நிலையத்தில் பிடிபட்டது. இது தொடர்பாக இளையான்குடியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன், சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, தீவிர சோதனை நடத்தும்படி உத்தரவிட்டார். இதையடுத்து இன்று அதிகாலை, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த தாவூத்பாட்ஷா (52) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் வைத்திருந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்தனர். அதற்குள் ஏராளமான மாத்திரைகள் இருந்தது. விசாரித்தபோது, தலைவலி, காய்ச்சல் போன்றவற்றுக்கு கொடுக்கும் சாதாரண மாத்திரைகள்தான் என்று தாவூத்பாட்ஷா கூறினார். இருப்பினும் அவரது பயணத்தை ரத்து செய்து மாத்திரைகள் சிலவற்றை எடுத்து ரசாயன பரிசோதனை நடத்தப்பட்டது. அவைகள் எபட்ரின் என்ற போதை மாத்திரைகள் என தெரிந்தது. அவரிடம் இருந்து 2 கிலோ மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம். இதையடுத்து தாவூத்பாட்ஷாவை கைது செய்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இந்த மாத்திரைகளை கொடுத்து அனுப்பியது யார், மாத்திரையை தயாரிக்கும் நிறுவனம் எங்கு உள்ளது என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக எபட்ரின் போதை பவுடர் கடத்துவதுதான் வழக்கம். ஆனால் அதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவதால் தற்போது நவீன முறையில் மாத்திரைகளாக தயார் செய்து கடத்த முயன்றது தெரியவந்தது.

No comments:

Post a Comment