Thursday, February 23, 2012

ராஜீவ் கொலையாளிகள் 3 பேருக்கு மரண தண்டனை வழங்கும் விவகாரத்தில்,விசாரணையை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றி உத்தரவிடக் கோரி மனு தாக்கல்!

Thursday, February 23, 2012
புது தில்லி::ராஜீவ் கொலையாளிகள் 3 பேருக்கு மரண தண்டனை வழங்கும் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றங்களுக்கோ அல்லது உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்றி உத்தரவிடக் கோரி எல்.கே.வெங்கட் என்பவர் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் மார்ச் மாதம் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, முதலில் நிலுவையில் உள்ள கருணை மனுக்கள் குறித்த விவரங்கள் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும். அதன்பின்னர், மனுதாரரின் மனு மீது விசாரணையை வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் ஜி.கே.மூப்பனார் பேரவை அமைப்பு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த அமைப்பின் எல்.கே.வெங்கட் என்பவர் இது தொடர்பான ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில், ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து நளினி, ஸ்ரீஹரன் என்ற முருகன், டி.சுந்தரராஜா என்ற சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற அனைவரின் மரண தண்டனையும் உறுதி செய்யப்பட்டது.

இந்த மூவரும் குடியரசுத் தலைவருக்கு செய்திருந்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், அதை மறு பரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தினத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே சுமார் ஐயாயிரம் பேர் கூடி கொலையாளிகளுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இது நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு போல அமைந்தது.

ராஜீவ் கொலையாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது கால தாமதம் ஆவதால், மரண தண்டனையைக் கைவிட வேண்டும் என்று தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசும் முந்தைய அரசும் வலியுறுத்தி வருகின்றன. இதை செய்தித்தாள்களும் தனியார் தொலைக்காட்சிகளும் வெளியிட்டு வருகின்றன.

தமிழக அரசின் இந்தச் செயல்பாடு நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்தக் கூடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் மரண தண்டனைக் கைதிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றன.

இத்தகைய சூழலில் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரும் வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பதற்கு இடையூறு நேரக்கூடும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கோ, உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்றலாம் என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment