Saturday, February 4, 2012

அணு உலையை ஆதரித்து பொதுக்கூட்டம் 3 மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

Saturday, February 04, 2012
நெல்லை::கூடங்குளம் அணுஉலையை ஆதரித்து நெல்லையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மின்பற்றாக்குறையை போக்க கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைவில் திறக்க வலியுறுத்தி நெல்லையில் காங்கிரஸ் சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாளை ஜவகர் திடலில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமை வகிக்கிறார்.
மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், நாராயணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், தனுஷ்கோடி ஆதித்தன், திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, குமரி அனந்தன், கிருஷ்ணசாமி உள்பட பலர் பங்கேற்கின்றனர். மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் வருகையையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லையில் பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில் இன்றைய தினமே அணுமின் நிலைய போராட்டக்குழு சார்பில் கூட்டப்புளி முதல் விஸ்வநாதபுரம் வரை பேரணி நடக்கிறது. எனவே நாகர்கோவில், ராதாபுரம், வள்ளியூர் பகுதியில் இருந்து காங்கிரசார் பாதுகாப்பாக பொதுக்கூட்டத்திற்கு வர போலீஸ் துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாநகரில் மட்டுமே 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment