Tuesday, February 21, 2012திருப்பூர்::திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் நகை கடையில் நேற்றிரவு மர்ம கும்பல் 40 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளது. திருப்பூர் குமரன் சாலை, தாலுகா அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், வடக்கு போலீஸ் ஸ்டேஷன், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதி. அதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மக்கள் நடமாட்டமும் எந்நேரமும் இருக்கும். இந்த சாலையில் ஆலுக்காஸ் ஜுவல்லரி உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றனர். கடை வாசலில் பாதுகாப்புக்கு காவலாளி இருந்தார். இன்று காலை 9 மணியளவில் ஊழியர்கள் கடையை திறந்தனர். உள்ளே நுழைந்தவர்கள் ஷோகேஸ்களில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வெளியே ஷட்டர் பூட்டியிருந்த நிலையில், உள்ளே நகை மாயமானது எப்படி என்று ஊழியர்கள் பரபரப்பு அடைந்தனர். அப்போது, கடையின் வென்டிலேட்டர் உடைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக உள்ளே மர்ம நபர்கள் புகுந்து, தங்க நகைகளை அள்ளி சென்றது தெரிந்தது. மொத்தம் ரூ.14 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வைரம், வெள்ளி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த டிஎஸ்பி ராஜாராம் விசாரணையை தொடங்கி உள்ளார். தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான கொள்ளையர்களின் தடயங்கள் மற்றும் ரேகைகளை பதிவு செய்கின்றனர். சென்னை பெருங்குடியில் பாங்க் ஆப் பரோடாவில் துப்பாக்கி முனையில் கடந்த மாதம் 23ம் தேதி ரூ.25 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. கீழ்க்கட்டளையில் நேற்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.14 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பூரில் தங்கம், வெள்ளி, வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதால் தமிழகத்தில் வர்த்தகர்கள் பீதி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment