Sunday, February 12, 2012லண்டன்::பிரிட்டன் தலைநகர் லண்டனில், மர்ம நபர்கள் சிலர், இந்திய மாணவர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றுள்ளனர். குத்துப்பட்ட மாணவர், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதாக வந்த தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பின.இந்நிலையில், சமீப காலமாக பிரிட்டனில், இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. புனேயைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இது போன்ற தாக்குதலில் பலியானார். அவரைத் தொடர்ந்து, பஞ்சாபைச் சேர்ந்த மற்றொரு மாணவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இதன் தொடர்ச்சியாக, லண்டனின் நியூஹேம் பகுதியில், பிரவீண் ரெட்டி என்ற இந்திய மாணவர், மர்ம நபர்கள் சிலரால் கத்திக் குத்துப்பட்டுள்ளார். இவர், லண்டன் பொருளாதாரப் பள்ளியில் எம்.பி.ஏ., படித்து வருகிறார்.
இதுகுறித்து, ஸ்காட்லாண்டு யார்டு போலீசார் விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த 10ம் தேதி காலையில் நியூஹேம் பொது மருத்துவமனையில் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில், இந்த மாணவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. விசாரணையில், அவர் கத்தியால் குத்தப்பட்டது தெரியவந்தது. இச் சம்பவம் தொடர்பாக, 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் விசாரணைக் காவலில் உள்ளனர். மீதி 7 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் உள்ள இந்திய ஐகமிஷனரைத் தொடர்பு கொண்டு பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாதிக்கப்பட்ட மாணவருக்கு உடனடியாக அனைத்து உதவிகளையும் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார். அதோடு, மாணவரின் சகோதரரிடம் பேசி ஆறுதல் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment