Sunday, January, 01,2012உத்தமபாளையம்:கேரள ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அங்குள்ள எதிர்க்கட்சியினர், புதிய அணைக்கு பூமிபூஜை எனும் பெயரில் இன்று விஷமத்தினத்தில் ஈடுபடக் கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் பெரியாறு அணை மற்றும் புதிய அணை கட்ட தேர்வு செய்யப்பட்ட பகுதிக்கு செல்லக்கூடிய வழிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரை கேரள அரசு குவித்துள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்டுவதில் கேரள அரசு விடாப்பிடியாக உள்ளது. புதிய அணை கட்டுவதை தவிர வேறு வழியில்லை என்று கேரள முதல்வர் உம்மண்சாண்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழகம், கேரளம் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் புதிய அணை கட்ட வலியுறுத்தி கேரளாவில் போராட்டங்கள் நடத்தி வரும் எதிர்கட்சி யினர், புத்தாண்டில் (இன்று) புதிய அணைக்கான பூமிபூஜையை நடத்தியே தீருவோம் என்று கூறி வருகின்றனர். இதனால் தேனி மாவட்டத்தில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முல்லை பெரியாறு விவகாரத்தில் சுமார் 20 நாட்களுக்கு பின்னர், கேரளாவுக்கு துவங்கிய அரசு பஸ் போக்குவரத்து, புதிய அணை பூமி பூஜை விவகாரத்தால் மீண்டும் நிறுத்தப்பட்டது. தேனி கலெக்டர் பழனிசாமியுடன் வக்கீல்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், ஜனவரி 1ல் பூமிபூஜை நடக்க வில்லை எனில் அடுத்த நாள் முதல் பஸ்களை இயக்கி கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
கேரளாவில் புதிய அணைக்கு பூமிபூஜை நடத்துவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளபோது அவர்களால் தன்னிச்சையாக எதுவும் செய்ய இயலாது. எனவே மக்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று கலெக்டர் வலியுறுத்தினார். ஆனால், புதிய அணை தேவையில்லை என்று கேரள அரசே அறிவிக்க வேண்டும். அதுவரை கேரளாவுக்கு எந்த ஒரு பொருளும் கொண்டு செல்ல விடமாட்டோம் என்று போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக கூறி விட்டனர்.
இந்நிலையில், கேரள அரசு புதிய அணை கட்ட தேர்வு செய்த இடத்துக்கு செல்லக்கூடிய வல்லக் கட வு பகுதியில், இன்று துப்பாக்கி ஏந்திய கேரள போலீசார் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரியாறு அணைப்பகுதியிலும் நேற்று மாலை முதல் ஏராளமான கேரள போலீசார் பாதுகாப் புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அணைக்கு செல்லும் பாதையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். கேரளாவில் ஆளும்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் எண்ணத்தில் சிலர் பூமிபூஜை என்ற பெயரில் விஷமத்தனத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேரள உளவுத்துறையும் எச்சரித்துள்ளதால் இடுக்கி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழக எல்லையான கம்பம் மெட்டு, குமுளி பகுதியிலும் இன்று கூடுதலாக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் கம்பம், கூடலூர் உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பூமிபூஜை எனும் பெயரில் பெரியாறு அணைப்பகுதிக்குள் யாரேனும் புகுந்து விட்டால், இருமாநிலங் களிலும் சகஜநிலைக்கு பங்கம் ஏற்பட்டு விடும் என்று மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து பெரியாறு அணைப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி கேரள அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. தமிழக பொறியாளர் ஒருவர் கூறும்போது, ‘‘நேற்று மாலையே பெரியாறு அணைப்பகுதியில் கேரள போலீசார் குவிக்கப்பட்டனர். புத்தாண்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பில் கூறப்பட் டுள்ளது. ஆனால் உளவுத்துறை எச்சரிக்கையின் பேரிலேயே இடுக்கி மாவட்டம் முழுவதும் பாதுகாப் பை பலப்படுத்தி உள்ளனர்’’ என்றார்.
No comments:
Post a Comment