Thursday,January 05, 2012சென்னை:தூத்துக்குடி பெண் டாக்டர் கொலையை கண்டித்து அரசு டாக்டர்கள் நேற்று போராட்டம் நடத்திய நிலையில், இன்று தமிழகம் முழுவதும் தனியார் டாக்டர்கள் 25 ஆயிரம் பேர் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல் மருத்துவமனை, லேப், ஸ்கேன் சென்டர்களும் மூடப்பட்டதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை மருத்துவராக இருந்தவர் டாக்டர் சேதுலட்சுமி. கிளினிக்கில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது மகேஷ் என்ற வாலிபர் கடந்த திங்கட்கிழமை இரவு சேதுலட்சுமியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். சேதுலட்சுமிக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் இருந்துள்ளது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்னதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் பெண் டாக்டர் கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேதுலட்சுமி கொலை, போலீசாரின் அலட்சியத்தை கண்டித்தும் டாக்டர்களுக்கு போதிய பாதுகாப்பு கேட்டும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், இஎஸ்ஐ மருத்துவமனைகளில் டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 8 லட்சம் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். சுமார் 1,500 ஆபரேஷன்கள் தள்ளிவைக்கப்பட்டன. எனினும், அவசர சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் தனியார் டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. சுமார் 6,000 தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உயிர் காக்கும் சிகிச்சைகள் மட்டுமே பெரிய தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது.
பெண் டாக்டர் சேதுலட்சுமி கொலையை கண்டித்து நாகர்கோவிலில் இன்று 100க்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு இருந்தன. பெரும்பாலான நோயாளிகள் இன்று அரசு மருத்துவமனைக்கு படையெடுத்தனர். இதனால் அங்கு புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் அலைமோதியது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, வேலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் இன்று மூடப்பட்டிருந்தன. நாகர்கோவிலில் பல் டாக்டர்கள், தனியார் ரத்த பரிசோதனை கூடங்கள், ஸ்கேன் சென்டர்கள், பார்மசிகளும் மூடப்பட்டதால் நோயாளிகள் கடும் வேதனை அடைந்தனர். பல ஊர்களிலும் இதே நிலை காணப்பட்டது. தமிழகம் முழுவதும் தனியார் டாக்டர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நோயாளிகள் சிகிச்சைகள் பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர். பல நோயாளிகள் இன்று தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வந்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து இந்திய டாக்டர்கள் சங்க மாநில தலைவர் (தேர்வு) டாக்டர் தங்கவேலு கூறுகையில், ÔÔஎங்கள் போராட்டம் மக்களுக்கு எதிரானது அல்ல என்பதால்தான், அவசர சிகிச்சைகள் வழக்கம் போல் அளிக்கப்படுகிறது. புறநோயாளிகள் பிரிவு இயங்காவிட்டாலும், தீவிரமாக கவனிக்க வேண்டிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி இருக்கிறோம். தனியார் மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்ÕÕ என்றார். சென்னையில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் இன்று பிற்பகல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து பாரிமுனை வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துகின்றனர். இதில் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment