Monday, January 30, 2012

மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் : கவர்னர் ரோசய்யா!

Monday, January 30, 2012
இலங்கை::சென்னை: தமிழக சட்டசபையில் கவர்னர் இன்று ஆற்றிய உரை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படு வதும் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது. நமது ஆட்சேபங்களுக்கு பிறகும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண இலங்கையிடம் கடுமையாக வலியுறுத்துமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள உணவு பாதுகாப்பு சட்ட முன்வடிவு, தற்போது அனைவரும் பெற்றுள்ள உணவு பாதுகாப்பில் இருந்து தமிழக அரசு பெறும் உணவு தானிய ஒதுக்கீட்டை குறைக்க வழி செய்கிறது. எனவே, மத்திய அரசு முன்மொழிந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டத்தின் தற்போதைய வடிவை இந்த அரசு எதிர்க்கிறது. வன்பொருள் உற்பத்தியில் அதிக முதலீடுகளை ஈர்ப்பது குறித்த சாத்திய கூறுகளை ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை அளிக்க தொழில்துறை பிரதிநிதிகளை உள்ளடக்கிய வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும்.

சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த சுற்றுலா உள்கட்டமைப்பு திட்டம் விரை வில் தொடங்க உள்ளது. தனியார் பங்களிப்புடன் தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்து வதற்கான கொள்கை வரும் ஆண்டுகளில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த புதிய திட்டம் : கவர்னர் ரோசய்யா!

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான புதிய செயல்திட்ட அறிக்கை, அடுத்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று சட்டசபையில் கவர்னர் ரோசய்யா தெரிவித்தார். சட்டசபையில் இன்று கவர்னர் ஆற்றிய உரை வருமாறு: உள்ளாட்சி அமைப்புகளை மேலும் வலுப்படுத்த, 4-வது மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகளின் படி, இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அது குறித்த செயல் அறிக்கை பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் வைக்கப்படும். மோசமான நிதி நிலைமையிலும், முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.8 ஆயிரம் கோடிக்கு கூடுதல் நிதி பல்வேறு புதிய நலத்திட்டங்களுக்காக இந்த அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் இந்த அரசு 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயை திட்டப் பணிகளுக்கு செலவிட திட்டமிட்டுள்ளது. இது 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செலவிடப்பட்டதைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமானதாகும். தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை கண்டறிதல், முன்னுரிமைப்படுத்துதல் போன்றவற்றை வழி நடத்த, ‘தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம்’ தோற்றுவிப்பதற்கான சட்ட முன்வடிவு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அறிமுகப்படுத்தப்படும்.

முக்கியமான திட்டங்களை செயல்படுத்துவதற்கு ‘உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி’ தனியாக அரசால் ஏற்படுத்தப்படும். அரசு மற்றும் தனியார் நிதி ஆதாரங்களை ஒருங்கிணைக்க அரசு தனியார் பங்களிப்பு கொள்கை ஒன்றை அரசு விரைவில் வெளியிடும். மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்க முதல்வர் உத்தரவிட்டதால், மாநிலத்தில் அபிரிமிதமான குறுவை விளைச்சல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட 75.95 லட்சம் டன் என்ற அளவை விஞ்சி இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி முதல்முறையாக 100 லட்சம் டன் அளவையும் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment