Thursday, January 5, 2012

பேச்சுவார்த்தை மேடைக்கு செல்லும் கூட்டமைப்பினர் வெளிப்படைத் தன்மையின்றி புலம் பெயர் தமிழரின் தாளத்திற்கேற்ப செயல்படுகின்றனர்:பிரபா கணேசன்!

Thursday,January 05, 2012
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் மட்டும் அரசாங்கம் இனப்பிரச்சினை தொடர்பாக பேசுவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. பேச்சுவார்த்தை மேடைக்கு செல்லும் கூட்டமைப்பினரும் வெளிப்படைத் தன்மையின்றி, புலம் பெயர் தமிழரின் தாளத்திற்கேற்ப செயல்படுகின்றனர் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை கொழும்பு பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில், தூதரக அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரிவின் இரண்டாம் நிலை செயலாளர் திருமதி. ஷாரா மான் மற்றும் அவரது செயலாளர் எஸ்மா ஆகியோருடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ஏனைய கட்சிகளினதும் அமைப்புகளினதும் ஆலோசனைகளைப் பெறுவதில்லை. அவர்களிடத்திலேயே ஒற்றுமையில்லை. அரசாங்கமும் தமிழ் தலைவர்களை பிரித்தாளும் கொள்கையினை கடைப்பிடிக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழர்களின் தாளத்திற்கு கூட்டமைப்பினர் ஆடுகின்றார்கள். இது நாட்டில் வாழும் தமிழர்களின் நலத்திற்கு ஆரோக்கியமானதல்ல என தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தது அபிவிருத்திக்காக மட்டுமின்றி இனப்பிரச்சினை தீர்வு காண்பதற்காகவுமே, இனப்பிரச்சினை தீர்வில் அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்திவராமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இதனால் இலகுவாக தீர்க்கப்பட வேண்டிய இனப்பிரச்சினை தீர்வு சிக்கல் நிறைந்ததாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பிரபா கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கை மக்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலமாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்ககூடியதாக உள்ளது. அதேபோல், யுத்தத்திற்கு பின்னரான இனப்பிரச்சினை தீர்வில் தாம் அக்கறையாகவுள்ளதாக அவர் பிரித்தானிய தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளரிடம் எடுத்துரைத்துள்ளார்.

வடமாகாணசபை தேர்தலை அரசாங்கம் நடத்துவதில் எமக்கு எவ்விதமான உடன்பாடும் கிடையாது. வடமாகாண தேர்தலின் பின்பு அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வை நோக்கி செல்லாது என்பதை நாம் அறிவோம். அரசாங்கத்திற்குள் இருக்கும் இனவாத கட்சிகளை சேர்ந்த அமைச்சர்களின் கருத்துகளுக்கு அரசாங்கம் பதிலளிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வடகிழக்கு மக்களைப்போன்று தென்னிலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு வீடமைப்பு பிரச்சினை, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு போன்று பாரிய பிரச்சினைகள் உள்ளன.
மலைநாட்டு இந்திய வம்சாவளி மக்களும் இந்நாட்டின் தேசிய இனமாக கருதப்பட வேண்டும். இனப்பிரச்சினை தீர்விலும் இந்திய வம்சாவளி மக்களின் அடிப்படை பிரச்சினை தீர்விலும் பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பிரபா கணேசன் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment