Tuesday, January 3, 2012

சென்னையில் தனியாக வசிக்கும் பெண்கள் அச்சத்தில் தவிப்பு: பாதுகாக்க போலீசார் தீவிரம்!

Tuesday, January 03, 2012 12
சென்னை:மேற்கு மாம்பலம் இரட்டை சகோதரிகள் ஜெயலட்சுமி, காமாட்சி, கோடம்பாக்கம் பரமேஸ்வரி, நெசப்பாக்கம் ரஞ்சிதம், வேளச்சேரி மோனிஜேக்கப், நுங்கம்பாக்கம் வங்கி அதிகாரி சீதாலட்சுமி என சென்னையில் தனியாக வசித்துவந்த பெண்களின் கொலைப்பட்டியில் நீண்டு கொண்டே செல்கிறது.

மோனிஜேக்கப் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. மற்ற 4 பெண்களும் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டவர்கள். இவர்களை கொன்றவர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை. இதற்கான காரணம் புரியாத புதிராகவே உள்ளது. இந்தநிலையில் வங்கி அதிகாரி சீதாலட்சுமியை கொலை செய்துவிட்டு கொள்ளையன் தப்பிச்சென்றிருப்பது போலீசுக்கு சவால்விடும் வகையிலேயே அமைந்துள்ளது.

சென்னையில் தொடரும் இதுபோன்ற கொலை சம்பவங்களால் வீடுகளில் தனியாக வசிக்கும் பெண்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். வயதான பெண்களே தனியாக வசித்து வருகிறார்கள். சென்னையில் சுமார் 1000 பேர் இதுபோன்று ஆதரவில்லாமல் தனியாக இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் பற்றிய தகவல்களை திரட்டியுள்ள போலீசார் தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் பற்றிய விவரங்களை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

வயதான பெண்கள் பலர் போலீஸ் நிலையங்களுக்கு சென்று தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகிறார்கள். தனியாக வசிக்கும் ஒவ்வொரு பெண்களையும் பாதுகாப்பது என்பது போலீசாரால் இயலாத காரியம். அதே நேரத்தில் அவர்களால் அந்த பகுதியில் ரோந்து சுற்றி ஒரளவுக்கு கண்காணிக்க முடிவும். இதுபோன்ற கொலை சம்பவங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் என்பது போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தனியாக இருக்கும் பெண்கள் முதலில் தங்களை சுற்றி பாதுகாப்பு வேலியை அமைத்துக் கொள்வது அவசியம் என்றும் இதற்காக தாங்கள் வசிக்கும் வீட்டின் கதவையோ ஜன்னல் களையோ தொட்டால் அலாரம் அடிக்கும் வகையில் பாதுகாப்பு வசதிகளை செய்து வைத்து கொள்ளலாம் என்று போலீசார் கூறுகிறார்கள். ஒரு சிலவயதான பெண்கள் உறவினர்கள் இருந்தும் ஆதரவற்றோர்போல இருக்கிறார்கள். இவர்களின் உறவினர்களையும் போலீசார் அழைத்து பேசி அறிவுரை வழங்கியுள்ளனர்.

பொதுவாக சென்னையில் வசதி படைத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் பக்கத்து வீட்டில் என்ன நடந்தாலும் அதுபற்றி யாரும் கண்டுகொள்ளவதில்லை. நமக்கெதற்கு வம்பு என்கிற மனநிலையில்லேயே உள்ளனர். பலர் ஏதாவது சத்தம் கேட்டால்கூட உடனே கதவை உள்பக்கமாக பலர் பூட்டி கொள்கிறார்கள்.

இதுபோன்று நமக்கென்ன என்கிற மனநிலையில் இருந்து விடுபட்டு, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆபத்து நேரத்தில் உதவ வேண்டும் என்கிற மனப்பக்குவம் ஏற்படவேண்டும் ...

சென்னையில் பெண்களின் கொலைப்பட்டியில் நீண்டு கொண்டே செல்கிறது:தொடரும் கொலைகள்!

சென்னை: சென்னையில் வங்கி பெண் ஊழியரை கழுத்தை நெரித்து கொன்று, 25 சவரன் நகையை பறித்து தப்பிய கொள்ளையனை பிடிக்க, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் காம்தார் நகர் 40 அடி திட்ட சாலையை சேர்ந்தவர் சீதாலட்சுமி (52). வள்ளுவர் கோட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்தார். இவரது கணவர் கப்பல் கேப்டன் ராம் மோகன். கடந்த 2008ம் ஆண்டு இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. சீதாலட்சுமி அக்கா பிரபாவதி (54). பாண்டிச்சேரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் துணை மேலாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை.

புத்தாண்டு விடுமுறை என்பதால், சீதாலட்சுமி வீட்டுக்கு பிரபாவதி வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு சீதாலட்சுமியும், பிரபாவதியும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். ஜன்னலில் ஏசி வைத்திருந்த இடத்தை பிளைவுட் வைத்து அடைத்திருந்தனர். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஒருவர் பிளைவுட்டை பெயர்த்து எடுத்துவிட்டு வீட்டினுள் நுழைந்துள்ளார். சத்தம் கேட்டு சீதாலட்சுமி எழுந்தார். உடனே அவரது கழுத்தை நெரித்தபடி வந்த கொள்ளையன், படுக்கையறைக்குள் புகுந்துள்ளான்.

அலறல் சத்தம் கேட்டு எழுந்த பிரபாவதி, தனது தங்கையின் கழுத்தை ஒருவர் நெரிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கொன்றுவிடுவதாக கொள்ளையன் மிரட்டியதும் பயந்துபோன பிரபாவதி, தனது வளையல், தங்கை அணிந்திருந்த செயின், 12 வளையல், 3 மோதிரம் உள்பட 25 சவரன் நகையை கழற்றி கொடுத்தார். அப்போதும் கொள்ளையன் சீதாலட்சுமியின் கழுத்தில் இருந்த கையை எடுக்கவில்லை. பின்னர், பீரோவை திறந்து பணத்தை எடுத்து தருமாறு கொள்ளையன் கேட்டுள்ளான். “நாங்கள் வங்கியில் வேலை பார்ப்பதால் வீட்டில் பணம் இல்லை” என்று பிரபாவதி கூறியுள்ளார்.

அப்போது பிரபாவதி கூச்சலிட முயன்றதும், அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய கொள்ளையன் வந்த வழியே தப்பிச் சென்றான். கொள்ளையன் கையை எடுத்ததும் கீழே விழுந்த சீதாலட்சுமி, வாயில் நுரைதள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். உடனே நுங்கம்பாக்கம் போலீசுக்கு பிரபாவதி தகவல் கொடுத்தார்.

இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சீதாலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் பியர், மகாலிங்கபுரம் அய்யப்பன் கோயில் வரை ஓடி சென்று நின்றது. கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், சரவணன், கிரி, குணவர்மன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடரும் கொலைகள்

கடந்த 2007ம் ஆண்டு வேளச்சேரியில் வசித்த மோனி ஜேக்கப் என்பவர், முகத்தை மூடி காஸ் சிலிண்டர் திறந்து விடப்பட்டு, மூச்சு திணற வைத்து கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மே மாதம் 11ம் தேதி மேற்கு மாம்பலம் கேஆர் கோயில் தெருவில் வசித்த அக்கா& தங்கையான ஜெயலட்சுமி, காமாட்சி ஆகியோர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டனர்.

அக்டோபர் 10ம் தேதி, கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியை சேர்ந்த பைனான்சியர் பரமேஸ்வரி சுவரில் தலையை மோதி கொல்லப்பட்டார். நவம்பர் 17ம் தேதி நெசப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதம் கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். இந்த 5 கொலைகளிலும் கொலையாளி இன்னும் சிக்கவில்லை.

கொலையாளி அடையாளம் தெரிந்தது?

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொலையாளியை பார்த்த ஒரே நபர் பிரபாவதிதான். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர் கூறியபடி கம்ப்யூட்டரில் படம் வரையப்பட்டது. அதை வைத்து பார்த்தபோது கன்னியாகுமரியை சேர்ந்த கொள்ளையன் ஏசுவடியான் படத்துடன் அது ஒத்துப்போனது. இவன் மீது நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் உள்ளது. 2 மாதத்துக்கு முன்புதான் ஏசுவடியான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான். அவனை பிடித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் 2 நாட்களில் கொலையாளியை பிடித்து விடுவோம்’’ என்றார்.

“கை எடுத்து கும்பிட்டேன்’’

கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அக்கா பிரபாவதி நிருபர்களிடம் கூறியதாவது: அதிகாலையில் 25 வயது மதிக்கத்தக்க ஒருவன் படுக்கை அறையில் நுழைந்து, எனது தங்கை கழுத்தை பிடித்துக் கொண்டிருந்தான். அதை பார்த்து திருடன் திருடன் என்று நான் கூச்சலிட்டதும், கழுத்தை நெரிக்க தொடங்கினான். பயந்துபோய் நானும், தங்கையும் அணிந்திருந்த 25 சவரன் நகையை கழற்றி கொடுத்தேன். பின்னர், என் கழுத்தில் கத்தியை வைத்து பீரோவை திறக்க சொன்னான்.

பீரோவையும், மற்றொரு அறையில் இருந்த 5 சூட்கேஸ்களையும் திறந்து காட்டினேன். பட்டு புடவைகள் மட்டும் இருந்ததால் எதையும் எடுக்கவில்லை. தங்கை மயங்கிய நிலையில் இருந்தார் அவரை அருகில் சென்று பார்க்க முயன்றேன்.அதற்கு அனுமதிக்காத கொள்ளையன், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வந்த வழியே தப்பிச் சென்றான்.
6 மாதம் முன்புதான் ஏசி மிஷின் பழுதானது.

எனவே, ஏசி மிஷினை எடுத்துவிட்டு அந்த இடத்தை பிளைவுட்டால் அடைத்திருந்தோம். கொள்ளையன் குள்ளமாக இருந்தான். முகமூடி அணியவில்லை. எனது தங்கையை எதுவும் செய்து விடாதே என்று கை எடுத்து கும்பிட்டேன். ஆனால் அநியாயமாக கொன்று விட்டான் அந்த பாவி“ என்று கண்ணீருடன் கூறினார்.

No comments:

Post a Comment