Tuesday, January 3, 2012

தமிழர் அரசியலில் 'துரோகிகள்' என்ற சொற்பதத்தை அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களே!:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 03, 2012 12
இலங்கை::தமது அரசியல் எதிரிகளுக்கு சூட்டிய

பட்டமே அது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கேள்வி: இலங்கையில் தமிழர்கள் நிலை எப்படி உள்ளது? முள் வேலியில்தான் வாழ்கின்றனரா?

பதில்: யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலச்சூழலில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக் குள்ளிருந்து வந்த மக்கள் தற்காலிகமாக நலன்புரி நிலையங்களில் தங்க வைக் கப்பட்டிருந்தார்கள். ஆரம்பங்களில் அங்குள்ள மக்களைப் பாதுகாப்பதற் காகவும், பராமரிப்பதற்காகவும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப் பட்டிருந்தன. இதைத்தான் முள்வேலிக்குள் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்று சிலர் பரப்புரை செய்து வந்தனர். ஆனால் நலன்புரி நிலையங்களில் இருந்த மக்கள் தற்போது தமது சொந்த இடங்களுக்கு பெருமளவில் திரும்பியுள்ளனர். யுத்தத்திற்கு பிந்திய இன்றைய சூழல் முன்னேற்றம் அடைந்து வருகின்றது. தமிழ் மக்களின் வாழ்விடங்கள் இப்போது மெல்ல மெல்ல நிமிர்ந்து வருகின்றன. தமிழ் மக்களின் வாழ்வியலும் நிமிரத் தொடங்கி விட்டது.

கேள்வி: தமிழர்களின் பகுதிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்படுவதாகவும், தமிழர்களின் சொத்துக்கள் எல்லாம் துப்பாக்கி முனையில் பறிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றதே?

பதில்: பத்திரிகை தர்மம் என்பது சிறிதளவும் அதாவது மருந்துக்குக் கூட இல்லாத அளவுக்கு சில தமிழ் ஊடங்களின் மூலம் அரசியல் காரணங்களுக்காக சில திட்டமிட்ட பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இது போன்ற விடயங்களுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. அவ்வாறு இருந்தால் நாம் அதை அனுமதிக்கப் போவதுமில்லை.

தமிழ் மக்களின் பகுதிகளுக்குள் சிங்கள மக்களை பலாத்காரமாக குடியமர்த்தி, இனப் பரம்பலை பாதிக்கச் செய்யும் திட்டமிட்ட குடியேற்றங்களை ஆரம்பகாலத்திலிருந்தே எதிர்த்து வருகின்றோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் அவ்வாறான நிலை இருந்தது என்பது உண்மையே... அதற்கு பின்னர் அப்படியில்லை.

என்னைப் பொறுத்தவரை தமிழ் நாட்டில் இருக்கும் ஒருவர் வேறொரு மாநிலத்தில் காணியையோ, வீட்டையோ வாங்குவதற்கு உரிமை இருப்பது போல இலங்கையில் வடக்கிலிருக்கும் ஒருவர் தென் இலங்கையில் காணி யையோ வீட்டையோ வாங்குவதற்கும், தென் இலங்கையிலிருக்கும் ஒருவர் வட இலங்கையில் காணியையோ வீட்டையோ வாங்குவதற்கும் உரிமையுண்டு. ஆனால், நான் முன்னர் சொன்னது போல் ஆட்சியில் உள்ளவர்கள் குடிப்பரம்பலை சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டு குடியேற்றங்களைச் செய்வதுதான் தவறானது. அப்படி ஒரு நிலை இப்போது இல்லை.

கேள்வி: கணவனை இழந்த தமிழ் பெண்களின் நிலை என்ன? அவர்களது வாழ்வு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகின்றதே?

பதில்: பொதுவாக எங்கும் இருப்பது போல் சமூகப் பிரச்சினைகள் வடக்கிலும் கிழக்கிலும், இருக்கத்தான் செய்கின்றன. அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளைத் தீர்க்க அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொழில் வாய்ப்புக்களையும், சுயதொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றன. அதற்காக என்னாலான பணிகளையும் நான் நிறைவேற்றி வருகின்றேன். இருந்தாலும் இவ்வாறான உதவிகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது.

கேள்வி: பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?

பதில்: பிரபாகரன் உயிருடன் இல்லை என்ற உண்மையை நான் உறுதியாகக் கூறுகின்றேன். தலைவர் வருவார் என்று மக்களை ஏமாற்றும் போலியான பேர்வழிகள் கூட பிரபாகரன் உயிருடன் இல்லை என்ற உண்மையை உள்ளூர உணர்ந்துள்ளனர்.

கேள்வி: டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்றவர்கள் எல்லோரும் இனத்துரோகிகள் என்று தமிழகத்தில் பிரசாரம் செய்யப்படுகிறது. பிரபாகரனுக்கு, இலங்கைத் தமிழர்களுக்கு நீங்கள் துரோகம் செய்தீர்களா?

பதில்: கருணா என்று நீங்கள் கூறும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பற்றி அவரிடமே கேட்பது நல்லது. இலங்கைத் தமிழர் அரசியலில் துரோகிகள் என்ற சொற்பதத்தை அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.

தமது அரசியல் எதிரிகளை துரோகிகள் என வரையறுத்த கூட்டமைப்புத் தலைவர்கள், துரோகிகளுக்கு இயற்கை மரணமில்லையென மேடைகளில் முழங்கி வந்தார்கள். இவர்களது மயிர்க்கூச்செறியும் பேச்சுக் களுக்கு எடுபட்ட அப்பாவித், தமிழ் இளைஞர்கள் தமிழ்த் தலைவர்களால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட வர்களை சுட்டுத் தள்ளினார்கள்.

பிற்காலத்தில் அவ்வாறு கூறிய தமிழ் தலைவர்களும் துரதிஷ்டவசமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் அநேகம். அடுத்ததாக துரோகம் என்பதன் அர்த்தம்தான் என்ன? நாடாளுமன்றத்திலே தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வொன்று வரும் பட்சத்தில், அதற்கு எதிராக வாக்களித்தாலோ அல்லது அதை குழப்பியடித்தாலோ... அதுதான் துரோகமேயன்றி வேறொ ன்றுமில்லை. இதை செய்தவர்கள் யார்? தமிழர் விடுதலைக் கூட்டணியினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், புலித் தலைவர்களும்தான் செய்தி ருக்கின்றார்கள்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் புலித்தலைமையால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், அல்லது அதனை ஏற்றுக் கொண்டவர்களால், அது சரியான முறையிலே கையா ளப்பட்டிருந்தால், அல்லது சந்திரிகா அம்மையாரினால் கொண்டு வரப்பட்டிருந்த தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவளித்து அதை நடைமுறைப்படுத்த ஏனைய தமிழ் தலைமைகள் உதவியிருந்தால், ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்களின் அழிவிற்கு காரணமாக விருந்திருக்கிறது. எமது மக்க ளின் உயிர்கள் அநியாயமாக பலியாகிவிடாமல் பாதுகாக்க வேண்டுமேயன்றி பலி கொடுத்து விட்டு மக்களின் அழிவில், அவலத்தில் அரசியல் நடத் துபவர்கள்தான் உண்மையான துரோகிகள்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலக்கட் டத்தில் தம்மில் 652 உறுப் பினர்கள் மட்டுமே மரணித் திருந்ததாக புலிகள் அன்று உரிமை கோரியிருந்தனர். ஆனாலும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து

தொடர்ந்தும் அழிவு யுத்தத்தில் புலிகள் ஈடுபட்டிருந்ததால் 2009 மே 18ம் திகதி வரையில் புலிகள் அமைப்பில் இருந்து கொல் லப்பட்டவர்களின் தொகை முப் பதினாயிரத்திற்கும் அதிகமானது என கணிப்பிடப்பட்டுள்ளது. அதை விட கொல்லப்பட்ட அப்பாவி மக்களையும் கருத்தில் எடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது சொத்து இழப்புக்கள், பொருளாதார பின் னடைவுகள், கலாசார சீரழிவுகள், மன உளைச்சல்கள், உடல் உறுப்புக்களை இழந்தவர்கள், கணவர்மாரை இழ ந்தவர்கள் போன்றவர்கள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அழிவுகளுக்கு யார் பொறுப்பு...? ஆகவே இங்கு யார் துரோகிகள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண் டும். இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த போது அரசியல் தீர்வு குறித்து புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களோடு நேரில் பேசி தீர்வு காண விரும்பு வதாக அறிவித்திருந்தார். ஆனால், அந்த சந்தர்ப்பத்தை சரிவரப் பயன்படுத்த விரும்பாத புலிகள், எமது மக்களைப் பலி கொடுக்கும் அழிவு யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆகவே இதில் யார் துரோகிகள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் அழிவு யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், வடக்கு நோக்கியும் தமது நடவடிக்கையினை படையினர் ஆரம்பிக்க எண்ணியிருந்தனர். அப்போது எமது மக்களை முன் கூட்டியே அழிவில் இருந்து காப்பாற்ற எண்ணி, நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோடு பல தடவைகள் பேசியிருந்தேன். ஜனாதிபதியோடு பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இந்த அழிவு யுத்தத்தை தடுத்து நிறுத்த முடியும் என்றும், இதற்கு ஜனாதிபதி விருப்பம் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்து நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந் தேன். ஆனாலும் அவர்கள் அதற்கு உடன்பட்டு வந்திருக்கவில்லை. அதன் பின்னரே படை நடவடிக்கை யின் மூலம் அழிவு யுத்தம் முடிவிற் குக் கொண்டு வரப்பட்டது.

ஆகவே இதில் யார் துரோகிகள் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனவே தமிழ் மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றவர்களும், அதற்கு துணைபோன வர்களும்தான் துரோகிகளேயன்றி எந்தவொரு மனித உயிரும் அநியாயமாகப் பலியாகிவிடக் கூடாது என்பதில் மிகவும் பொறுப்புடனும் அக்கறையுடனும் செயற்பட்டு வரும் நாமல்ல துரோகிகள். வியாபார நோக்குடனும் குறுகிய அரசியல் நோக்குடனும் செயற்பட்டு வரும் சில தமிழ் ஊடகங்களினால் ஒரு காலத்தில் நாம் துரோகிகள் என வர்ணிக்கப்பட்டோம். தமிழகக் தலைவர்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலரும் அறிந்தும், அறியாமலும் இதற்கு துணை போனார்கள்?

ஆனால், வசந்தகாலம் வந்து விட்டது. காக்கைக்கும் குயிலுக்கும் வித்தியாசம் தெரியவந்துள்ளது. உயிரையே துச்சமென மதித்து மக்களுக்காக மக்களுடன் சேவை செய்தவர்கள் யார்? மக்களின் அழிவில் அரசியல் பிழைப்பு நடாத்துபவர்கள் யார்? என்பதை மக்கள் இப்போது, இனங்கண்டு வருகின்றனர். இதனால்தான் ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாக மக்கள் எம்மை தமது பிரதிநிதிகளாக தொடர்ந்து தெரிவு செய்து வருகின்றனர். தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடையே அதிகூடிய விருப்பு வாக்குளை வழங்கி, கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் என்னைத் தெரிவு செய்தும் உள்ளனர்.

கேள்வி: புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா வெளியேறியதற்கு உண்மைக் காரணம் என்ன?

பதில்: முரண்பாடுகள் எங்கும் உருவாகும், எந்த கட்சியில் இருந்தும் வெளியேற யாருக்கும் உரிமை உண்டு. புலிகளின் தலைவர்களில் ஒருவரான மாத்தையா எனும் மகேந்திரராஜா என்பவர் புலிகளோடு முரண்பட்ட போது அவர் பிரபாகரனால் கொல்லப்பட்டார். ஆனாலும் கருணா புத்திசாலித்தனமாக புலிகளில் இருந்து வெளியேறியதோடு தன்னையும் பாதுகாத்துக் கொண்டார். ஆனாலும் இந்தக் கேள்வியை நீங்கள் கருணா அவர்களிடம் கேட்டால் உரிய பதில் கிடைக்கும்.

கேள்வி: கருணா காட்டிக் கொடுத்ததால்தான் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதா?

பதில்: கருணா பிரிந்து போயிருக்காவிட்டாலும் புலிகளின் தலைமை அழிந்து போயிருக்கும். ஏன் என்றால், புலிகள் நடத்திய வன்முறைகள் எல்லையில்லாத அளவில் கொடூரமாகவும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலவும் ஆகிவிட்டது. ஆகவே அதன் முடிவு பலரும் எதிர்பார்த்தது போலவே முடிந்துள்ளது. காலத்தின் சூழலை அனுசரித்து பலம் இருந்த போதே நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து செயற்பட்டிருந்தால் இந்த முடிவு அவர்களுக்கு வந்திருக்காது. எமது தமிழ் இளைஞர் யுவதிகளை புலிகள் தமது தவறான வழிநடத்தல்கள் மூலமாகவும், பலாத்காரமாகவும் தம்மோடு இணைத்து அவர்களையும் பலிக்களத்திற்கு அநியாயமாக இரையாக்கி விட்டார்கள்.

கேள்வி: பொட்டு அம்மான், பிரபாகரனின் மனைவி, மகள் என்ன ஆனார்கள்?

பதில்: அவர்கள் உயிரோடு இருப்பதாக நிரூபிக்கக்கூடியதான செய்திகள் எதுவுமில்லை.

கேள்வி: தனி ஈழத்துக்குப் போராடியவர்களின் வரலாற்றை மறைக்கும் விதமாக இலங்கை அரசு செயற்படுவதாக கூறப்படுகிறதே? நினைவிடங்கள் பல அழிக்கப்பட்டுவிட்டதே?

பதில்: நானும் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவன்தான். புலிகள் பல தடவைகள் என்னை கொலை செய்ய முயன்றார்கள். என்றாலும் எனது வரலாறு யாராலும் அழிக்கப்படவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னரான சூழலில் நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து அரசாங்கத்தின் உறவுக்குக் கரம் கொடுத்து தமிழ் மக்களின் உரிமைக்கும் குரல் கொடுத்து வருகின்றேன்.

இதை யாரும் தடுக்கவில்லையே. இது தவிர ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் தோழர் பத்மநாபா, ரெலோ தலைவர் ஸ்ரீசபாரத்தினம் போன்றவர்கள் ஆயுதப் போராட்ட வாழியிலும், தேசியத் தமிழ்த் தலைவர் அமிர்தலிங்கம், கலாநிதி நீலன் திருச்செல்வம் மற்றும் யோகேஸ்வரன் போன்றவர்கள் அஹிம்சை வழியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே போராடியிருந்தார்கள். புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட இவர்களைப் போன்ற இன்னும் பலருக்கு தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நினைவுச் சிலைகளை அமைப்பதற்கு புலிகள் அனுமதித்திருந்தார்களா? இல்லையே. இந்த நியாயங்கள் கூட ஏற்றுக் கொள்ளப்பட முடியாத போது நீங்கள் கூறும் இது மட்டும் எப்படி சாத்தியமாகும்?...

கேள்வி: இரவு நேரத்தில் வீடு புகுந்து பெண்களை மானபங்கம் செய்வதாக சிங்கள இராணுவம் மீது குற்றம் சுமத்தப்படுகின்றதே?

பதில்: இது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் தோற்றுவிக்கும் பொய்யான பரப்புரையாகும். இது போன்ற பொய்யான பரப்புரைகள்தான் எமது பெண்களை மானபங்கம் செய்கின்றன. வீடிழந்த தமிழ் மக்களுக்கு வீடுகளைக் கூட இப்போது இராணுவம் அமைத்துக் கொடுக்கும் அளவிற்கு நிலைமை மாற்றமடைந்திருக்கிறது.

தேவையெனில் இவைகளை நேரில் வந்து யாரும் பார்க்கலாம்.

கேள்வி: இந்தியா பலகோடி ரூபா செலவில் இலங்கைத் தமிழர்களுக்கு கட்டிக் கொடுத்த வீடுகள் தரம் இல்லாமல் உள்ளதாகவும் அவற்றில் குடியேறமுடியாத நிலையில் மக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறதே?

பதில்: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டமானது, நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த வேளையில், மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் அவர்களும் நானும் கலந்துரையாடியதன் விளைவாக உருவாக்கப்பட்ட திட்டமாகும். பின்னர் இத்திட்டம் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு, பிரதமர் மன்மோகன் சிங்கால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அறிவிக்கப்பட்டதற்கு எனது பங்களிப்பு பிரதானமாக இருந்தது என்பதையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கின்றேன். அத் திட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்திய அரசால் இந்திய ஒப்பந்தக்காரர்களிடம் வழங்கப்பட்டிருந்தது. இப்பணிகளில் ஏற்பட்ட தாமதங்களும் குறைபாடுகளும் கவனத்தில் எடுக்கப்பட்டிருந்தன. அண்மையில் சார்க் உச்சி மாநாட்டுக்காக நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மாலைதீவு சென்றிருந்த வேளையில் இலங்கை ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இவ் வீடமைப்பு திட்டம் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன் போது ஒப்பந்தக்காரர்களின் மூலம் வீடுகளை அமைப்பதில் ஏற்படுகின்ற காலதாமதங்கள் குறித்து கவனத்தில் எடுக்கப்பட்டது. எனவே ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து இத் திட்டம் மீளப் பெறப்பட்டு பயனாளிகளிடம் நேரடியாக கையளிப்பதென்றும், மூன்று கட்டங்களாக பயனாளிகளுக்குப் பணம் வழங்கப்படுவதோடு மேலதிகமாக பயனாளிகளும் தங்களால் இயன்ற பணத்தை செலவு செய்து தமது விருப்பத்திற்கு ஏற்றவகையில் வீடுகளை அமைத்துக் கொள்ள முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கேள்வி:புலிகள் இயக்கம் ஈழத் தமிழர்களிடம் நிதியாக வசூலித்த 50 தொன் தங்கத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும், இந்திய வெளிவிகாரத்துறை அதிகாரி ஒருவர் மூலம் கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறதே?

பதில்: போரிற்குப் பின் அங்கு மீட்கப்பட்ட சொத்துக்களில் அரச வங்கிகளுக்குரியவை அந்தந்த வங்கிகளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு புலிகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கின்றேன்.

கேள்வி: புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கே. பத்மநாதன் என்ன ஆனார்? வெளிநாட்டில் விடுதலைப் புலிகள் முதலீடுகளை எல்லாம் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் காட்டிக் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறதே?

பதில்: அவர் இலங்கை அரசின் விசாரணைக்கு உட்பட்டவராக இருக்கின்றார். விசாரணைகளின் போது பல்வேறு விடயங்கள் வெளிவந்திருக்கலாம்.

கேள்வி: கே. பிக்கும், ரூசோவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில்தான் புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதம் வராமல் தடுக்கப்பட்டதாகவும், புலிகள் மீது போர் நடத்துவதற்கு முன்பே கே.பி. இலங்கை இராணுவத்திற்கு பல தகவல்களைக் கொடுத்து உளவாளியாகச் செயற்பட்டதாகவும் கூறப்படுகிறதே?

பதில்: அவ்வாறு நடந்திருந்தாலும் ஆச்சரியமில்லை. புலிகளுக்குள் உள் முரண்பாடுகள் இருந்தன என்பதும் உண்மைதான். ஆனாலும் புலிகளின் தலைமை தமக்குரிய படுகுழியை தாமே தோண்டிக் கொண்டது என்பதுதான் உண்மை. சக விடுதலை இயக்கங்களை புலிகள் தடை செய்து அதன் தலைவர்களையும், சக போராளிகளையும் கொன்றொழிக்க ஆரம்பித்த போதே புலித் தலைமையின் அழிவும் ஆரம்பமாகிவிட்டது.

புலிகளின் இந்த செயல் தமிழ் இனத்தை பலவீனப்படுத்தும் என்றும் இதனால் அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்படும் என்றும் நான் அன்றே தீர்க்கதரிசனமாக தெரிவித்திருந்தேன். இப்போது யுத்தத்தின் தோல்வியை மறைப்பதற்காக இப்படி பல கதைகள் உலாவவிடப்பட்டிருக்கின்றன. புலிகளின் தோல்விக்கு கருணாதான் காரணமாக இருந்தாரா என்று நீங்கள் என்னிடம் கேட்டது போல் பல கதைகளும் ஊகங்களும் இன்னமும் வெளிவரலாம்.

கேள்வி: இலங்கையில் சீன இராணுவ முகாம் அமைப்பதற்கான முஸ்தீபுகள் உண்மையிலேயே அங்கு நடக்கிறதா?

பதில்: எனக்குத் தெரிந்த வகையில் இல்லை. ஆனால் பொருளாதார முதலீடுகளும் உதவிகளும் பரவலாகக் காணப்படுகின்றன. இது தவிர, இந்தியாவோடு இலங்கையை முரண்பட வைப்பதற்கான முயற்சிகளில் இது போன்ற கதைகளும் உலாவிடப்படலாம். என்னைப் பொறுத்தவரையில் இலங்கை இந்திய நல்லுறவுதான் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கும் வழி கோலும், தயவு செய்து இந்த தொப்புள் கொடி உறவை யாரும் அறுக்க முயற்சிக்கக் கூடாது.

கேள்வி: பாக்கு நீரினை சந்தியில் கூட்டுப்படைக் கண்காணிப்புத்திட்டம் என்ற இலங்கை அரசின் முயற்சி எந்த வகையான பின் விளைவுகளைத் தரும்?

பதில்: அதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கேள்வி: கூடங்குளம் அணுமின்னிலையத்தில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்க மத்திய அரசும் இலங்கை அரசும் ஒப்பந்தம் செய்துள்ளதாக வை.கோ கூறுகிறாரே?

பதில்: அதில் உண்மையில்லை

கேள்வி: தமிழக அரசியல் தலைவர்களையும் இலங்கைத் தமிழர்களுக்கான போராட்ட அமைப்புக்களையும் இலங்கைத் தமிழர்கள் நம்பிக்கையோடு பார்க்கிறார்களா? தமிழகத்தில் இருந்து அவர்கள் எதிர்பார்ப்பது என்ன?

பதில்: தமிழகம் ஈழத்தமிழர்களின் வேரடி மண் இதை யாராலும் மறுக்க முடியாது. இலங்கையில் இருந்து திட்டமிட்டு பரப்பப்படும் தவறான கருத்துக்களை வைத்து எதையும் தீர்மானிப்பது சரியானது அல்ல. நோய் தீர அதற்கு வைத்தியம் தேவை. தொடர்ந்தும் நோயை மட்டும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஈழத்தமிழர்கள் கோமா நிலையில் இருந்து, அதாவது மரணப்படுக்கையில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். இதுவரை துயரங்களையும் அவலங்களையும் சுமந்து வந்த இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு கெளரவமாகவும் தொடர்ந்தும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு ஏற்றவகையான பங்களிப்பை தமிழக உறவுகள் வழங்க வேண்டும் என்பதே எமது மக்களின் எதிர்பார்ப்பாகும். இதில் தமிழக அரசியல் தலைவர்களும், ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு அமைப்புகளும் நடைமுறை சார்ந்து சிந்திக்க வேண்டியது கடமையாகும்.

ஈழத்தமிழர்கள் விரும்புவது அரசியல் பழிவாங்கல்களை அல்ல. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னரான அழிவுகளுக்கு, கிடைத்திருந்த பல்வேறு சந்தர்ப்பங்களையும் தவற விட்ட சில தமிழ் அரசியல் தலைமைகளும் பொறுப்பை ஏற்க வேண்டும். அப்படி பார்த்தால் யாரை யார் பழிவாங்குவது? உணர்வு பூர்வமாக சிந்தித்து நொந்து தவித்த தமிழ் மக்களின் வாழ்வில் நிரந்தர மகிழ்ச்சியை உருவாக்குவதே நோக்கமாக இருக்க வேண்டும். அற்றைத்திங்கள் அவ்வெண்நிலவில் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய வாழ்வு இங்கு திரும்ப வேண்டும். அது சமவுரிமையோடு கூடியதாக இருக்க வேண்டும். கனிந்திருக்கும் இந்த நல்லதொரு சூழலை நாம் முன்னோக்கி செல்ல பயன்படுத்த வேண்டும். வன்முறைகள் இனி இங்கு வேண்டாம். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் முயற்சிகளும் தமிழ் நாட்டு உறவுகள் குரல் கொடுக்க வேண்டும். சகலரும் ஈழத்தமிழர்களின் உண்மையான கருத்துக்களையும், விருப்பங்களையும் சரிவர அறிந்து கொள்ளவும் வேண்டும்.

கேள்வி: தமிழ் ஈழம் பிறக்கும் என்ற நம்பிக்கை இன்னமும் உங்களிடம் இருக்கிறதா? ஈழத்தமிழ் மக்கள் நம்புகிறார்களா?

பதில்: அதற்கான சாத்தியமில்லை என்பதை வரலாறு நிரூபித்துவிட்டது. அதற்கென நடத்தப்பட்ட போராட்டம் அழிவு யுத்தமாக மாற்றப்பட்டதால் தமிழ் மக்களுக்கு வதைகளையும் வலிகளையும் வாங்கி தந்ததுதான் மிச்சம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தோடு ஆயுதப் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அன்றைய எமது நீதியான ஆயுதப் போராட்டம்தான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உருவாக்கியும் தந்திருந்தது. அதற்காக நாமும் அர்ப்பணங்களோடு போராடியிருக்கின்றோம். இந்த ஒப்பந்தம் புலிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் அல்லது அதை ஏற்றுக் கொண்டவர்களால்,

அது சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், ஈழத் தமிழர்கள் இன்று சுயநிர்ணய உரிமையை நடைமுறையில் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை என்பதே துயரம். தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சம உரிமையோடு வாழ்வதையே விரும்புகின்றார்கள். தமிழர்களாக இருப்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தையோ, அன்றி இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தையோ ஈழத் தமிழ் மக்கள் இழப்பதற்கு ஒரு போதும் தயாராக இல்லை. ஆகவே தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் இருக்கவே இங்குள்ள தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.

No comments:

Post a Comment