Thursday, January 12, 2012சென்னை::சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரி சார்பில், “புதிய நூற்றாண்டில், சமூகம் மற்றும் சட்டத்தில் பெண்களுக்கான பங்களிப்பு“ குறித்த கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். மசாசுசெட்ஸ் பாஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் சூசன்னா எர்லிச், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் ஜெனிபர் மெக்இன் டயர் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் துணை தூதர் ஜெனிபர் பேசியதாவது: சமீபகாலமாக தகவல் தொடர்பு, சமூகம் மற்றும் வர்த்தகத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் பெண்களுக்கு சமஉரிமை என்ற மாற்றம் ஏற்பட்டுள் ளது. எனவே, சர்வதேச சமூகம் பெண்களுக்கு சம உரிமை அளிக்க முன்வர வேண்டும். தொழில் முனைவோர், அலுவலக உயர் அதிகாரிகள், கொள்கை முடிவெடுப்பவர்களாக பெண்கள் உள்ளனர்.
2011ல் நான் இந்தியா வந்தபோது, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். 40சதவீத பெண்கள் கிராம மற்றும் நகராட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளாக உள்ளனர். இது இந்தியாவில் அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒரு சர்வே எடுக்கப்பட்டதில் ஆண்களை விட பெண்கள்தான் குடும்ப தலைவியாக இருந்து குடும்பத்தை முன்னேற்றுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. பெண்களுக்கு அதிக வாய்ப்புகளையும், உரிமைகளையும் அளித்தால் தான் சமூகத்தில் மாற்றமும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment