Tuesday, January 3, 2012

புயலால் பாதிக்கப்பட்ட புதுவை, கடலூரில் மறியல் தொடர்கிறது; மக்கள் ஆவேசம்!

Tuesday, January 03, 2012 12
கடலூர் : கடலூர், புதுச்சேரி மக்கள் தானே புயல் பாதிப்பில் இருந்து 6வது நாளாக இன்றும் மீளவில்லை. பல இடங்களில் மின் தடையை கண்டித்து மறியல் நடந்தது. நேரில் ஆய்வு சென்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மக்கள் முற்றுகையிட்டு சரமாரி கேள்விகள் எழுப்பினர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 15 பேர் காயம் அடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தானே புயல் கரை கடந்த போது, கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரியை தலைகீழாக புரட்டி போட்டது. மீன்பிடி படகுகள் நொறுங்கின. கடலோர பகுதிகளில் வீடுகள் இடிந்தன. பல இடங்களில் மரங்கள், கேபிள், மின்சார வயர்கள் அறுந்து விழுந்தன. விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது. வாழை, முந்திரி உள்பட பல பயிர்கள் நாசம் அடைந்தன. புயல் கரை கடந்து இன்றோடு 6 நாட்களாகியும் அத்தியாவசிய பொருட்கள் சரிவர கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புதுச்சேரி பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் விரைந்து நடந்து வருகிறது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று புதுச்சேரியில் நேரில் ஆய்வு செய்தார்.
அபிஷேகப்பாக்கம் பகுதிக்கு சென்ற சிதம்பரத்தை ஏராளமான மக்கள் முற்றுகையிட்டு, புயல் கரை கடந்து 5 நாட்களாகியும் நிலைமை மோசமாகவே உள்ளது. மின்சாரம், தண்ணீர், உணவு கிடைக்காமல் அவதிப்படுகிறோம். பலருடைய வீடுகள் இடிந்து விட்டன. நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்Õ என்று முறையிட்டனர். அதற்கு சப் கலெக்டர் முத்தம்மா மற்றும் அதிகாரிகள் பாரபட்சமின்றி நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும் சிதம்பரம் கூறுகையில், புயல் பாதிப்புகளை பார்வையிட ஓரிரு நாட்களில் மத்திய குழு புதுச்சேரி வரஉள்ளது. இங்கு நான் பார்த்த பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைப்பேன். மேலும், வீடுகளை இழந்தவர்களுக்கு நிரந்தரமாக ஓட்டு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு சார்பில் இன்று இரவுக்குள் நிவாரண தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுÕÕ என்றார். பின்னர் பல பகுதிகளை பார்வையிட சென்றார். தானம்பாளையத்திலும் சிதம்பரத்தை முற்றுகையிட்டு மக்கள் குறைகளை கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மின் சப்ளையை சீராக வழங்க கோரி புதுச்சேரியில் இன்று பல இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கடலூரிலும் 6வது நாளாக இன்றும் புயல் பாதிப்பு தீரவில்லை. கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், வடலூர், குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு உள்பட பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

புயலில் முறிந்து விழுந்த மரங்கள் பல இடங்களில் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பாதிரிப்புலியூர், பாதிரிக்குப்பம், கோண்டூர், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம், குடிநீர் கேட்டு மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட புதுப்பாளையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை நிவாரணப் பொருட்கள் வழங்கினார். மக்கள் ஏராளமானோர் திரண்டனர். விஜயகாந்த்தை முற்றுகையிட்டு, Ôஐந்து நாட்களாக மின்சாரம் இல்லை, குடிநீரும் கிடையாது. சாலைகளில் மின்கம்பம், மரங்கள் விழுந்து கிடப்பதால், குடிநீர் லாரி வருவதற்கு வழியில்லைÕÕ என்று மக்கள் சரமாரியாக புகார் கூறினர். கூட்டம் அதிகமாக இருந்ததால், நிவாரணப் பொருட்களை தொடர்ந்து விஜய காந்தால் வழங்க முடியவில்லை. மேலும், 500க்கும் அதிகமான பெண்கள் உள்பட ஏராளமானோர் அங்கு கூடியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 15 பேர் காயம் அடைந்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு எதுவும் இல்லாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தேமுதிகவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment