Tuesday, January 31, 2012

சர்வதேச கும்பல்களுடன் தொடர்பு அம்பலம்: ஏ.டி.எம்.,இலங்கை கொள்ளையர் பற்றி "திடுக்' தகவல்!

Tuesday, January 31, 2012
திருச்சி::திருச்சியில் சிக்கிய இரண்டு ஏ.டி.எம்., கொள்ளையர்களுக்கு, சர்வதேச கும்பல்களுடன் தொடர்பு இருப்பது, விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவர்கள், திருச்சியில் மட்டும் நான்கு ஆண்டுகளில், கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியது தெரியவந்துள்ளது.

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., முன், நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியில் இருந்து, "இன்னோவா' கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. 4 மணி வரை அங்கேயே நின்ற கார் குறித்து, கண்டோண்மென்ட் குற்றப் பிரிவு ஏ.சி., காந்தி, இன்ஸ்பெக்டர் வரதராஜன் விசாரணை நடத்தினர்.

ஏ.டி.எம்.,மில் இருந்து வெளியே வந்த டிப்-டாப் இளைஞர்கள் இருவர், தங்களது கார் என்றும், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கச் சென்றிருந்ததாகவும் கூறினர். பல மணி நேரம் ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தது குறித்து, போலீசார் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். அவர்கள் கையில், 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஏ.டி.எம்., கார்டுகள் இருந்தன. சந்தேகத்தின்படி, இருவரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள்: திருச்சி கருமண்டபம் ஜெய்நகரை சேர்ந்த திருச்சிற்றம்பலம் மகன் ராகவன்,30. தில்லைநகரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் ஐ.ஓ.பி., நகரை சேர்ந்த முரளி (18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). ராகவனின் அண்ணன்கள் ராஜன், ராஜ்பாபு, ராஜ்மோகன் லண்டனில் இருக்கின்றனர். சில ஆண்டுக்கு முன் தான், லண்டனில் இருந்து ராகவன் திருச்சி வந்தார்.

அண்ணன்களின் நண்பர் ராஜ்குமார் என்பவர், பெல்ஜியத்தில் வசிக்கிறார். பெல்ஜியத்தை பொறுத்தவரை, கணக்கில் உள்ள பணம் குறைந்தாலோ, திருட்டுப் போனாலோ இன்சூரன்ஸ் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதால், அங்குள்ளவர்கள் புகார் கொடுப்பதில்லை.

கைரேகை, கண்ணின் கருவிழி பதிவு உள்ளிட்ட காரணங்களால், பெல்ஜியத்தில் வெறும், "பின்' நம்பரை மட்டும் வைத்து பணம் எடுக்க முடியாது. இதனால், அங்குள்ள ஏ.டி.எம்., கார்டுகளை ராஜ்குமார் போலியாக தயாரித்து, கூரியர் மூலம் இங்கு அனுப்புவார். ராகவன் அதை வைத்து, நள்ளிரவு 2 மணி முதல் 5 மணிக்குள் பணத்தை எடுத்துவிட வேண்டும். ஒரே ஒரு முறை மட்டுமே போலி கார்டுகளை பயன்படுத்துவர். கார்டுகளை பொறுத்து, ஒருமுறைக்கு, 10 லட்ச ரூபாய் வரை பணமெடுப்பார்.

பணத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக எடுத்துக் கொண்டு, ராஜ்குமாருக்கு பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் மீதித் தொகையை அனுப்பி விடுவார். ராகவனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரும், கடந்த நான்காண்டுகளாக இவ்வேலையில் ஈடுபட்டு, 10 கோடி ரூபாய் வரை பணம் எடுத்தனர். அதற்கு கமிஷன் பெற்று, மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.

ராகவன், முரளி ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 13 போலி ஏ.டி.எம்., கார்டுகள், 1.60 லட்ச ரூபாய் ரொக்கம், 15 சவரன் நகைகளை கைப்பற்றினர். ராகவன் மத்திய சிறையிலும், முரளி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

ராகவன் அளித்த தகவலின்படி, ஏ.டி.எம்., கொள்ளையில் தொடர்புடைய ஐ.ஓ.பி., காலனியை சேர்ந்த சுமன், கணேசனை தேடிச் சென்றனர். தலைமறைவாகிவிட்ட அவர்களின் அறையில் இருந்து, 42 போலி ஏ.டி.எம்., கார்டுகளை போலீசார் கைப்பற்றினர். ஏ.டி.எம்., கொள்ளையில் ஈடுபட்டுள்ள லண்டன், பெல்ஜியம் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும், இலங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் தடுமாற்றம்? : திருச்சி குற்றப் பிரிவு போலீசார் வழக்கை விசாரித்தாலும், ஏ.டி.எம்., மொபைல் போன், இன்டர்நெட் போன்ற, "நவீன' கொள்ளை குறித்து முழுமையாக விசாரிக்கவோ, அவற்றை கண்டறியவோ உரிய சாதனங்கள் இங்கில்லை. இதனால், வெறும் திருட்டு வழக்கோடு குற்றவாளிகள் தப்பிவிடுவர்.

இதனால், அவர்களின் பின்னணியில் உள்ள, தமிழகத்தை மையமாக வைத்து கொள்ளையடிக்கும் சர்வதேச கும்பல் குறித்த விவரங்கள் வெளிவராமலேயே போய்விடும். இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை, ஆதி முதல் அந்தம் வரை விசாரிக்கும் திறன் படைத்த, சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார், இவ்வழக்கில் கவனம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment