Friday, January 6, 2012

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்!

Friday, January 06, 2012
புதுடெல்லி:லோக்பால் மசோதா மீது மாநிலங்களவையில் ஓட்டெடுப்பு நடத்த, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் பா.ஜ. தலைவர்கள் மனு கொடுத்தனர். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா மீது மாநிலங்களவையில் கடந்த மாதம் 29ம் தேதி நள்ளிரவு வரை விவாதம் நடந்தது. குழப்பமான சூழ்நிலை நிலவியதால் ஓட்டெடுப்பு நடத்தாமல் அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. லோக்பால் மசோதா நிறைவேறாமல் போனதற்கு காங்கிரஸ், பா.ஜ கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை பா.ஜ., தலைவர்கள் நிதின் கட்கரி, அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் அடங்கிய குழு நேற்று சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது.

மிக முக்கியமான லோக்பால் மசோதா மீது மாநிலங்களைவையில் ஓட்டெடுப்பு நடத்தாமல் அரசு சதி செய்தது நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைத்த செயல். இது போன்ற சம்பவம் நடக்கும்போது, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். லோக்பால் மசோதா மீது மாநிலங்களவையில் ஓட்டெடுப்பு நடத்த, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்க வேண்டும்.

இவ்வாறு பா.ஜ. கட்சி அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது. பல அம்சங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக பா.ஜ குழுவினரிடம் பிரதிபா பாட்டீல் கூறினார்.
பின்னர், அருண் ஜேட்லி அளித்த பேட்டியில், ‘‘மாநிலங்களவையில் லோக்பால் மசோதா மீது ஓட்டெடுப்பை தவிர்க்க அரசே குழப்பத்தை ஏற்படுத்தியது. பல திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என எதிர்கட்சிகள் கூறின. சில கட்சிகளின் ஆதரவை பெற அரசு முயன்றது. ஆனால் தங்களுக்கு மாநிலங்களவையில் மெஜாரிட்டி இல்லை என்பதை அறிந்ததும், ஓட்டெடுப்பை தவிர்க்க ஆட்சியில் இருக்கும் கட்சியினரே கூச்சல் குழப்பத்தில் இறங்கினர். நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment