Tuesday, January 31, 2012

அடகு கடையில் துளை போட்டு ரூ.1.25 கோடி நகைகள் கொள்ளை!

Tuesday, January 31, 2012
ஆம்பூர்::அடகு கடையில் நள்ளிரவில் துளை போட்டு ரூ.1.25 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (53). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். தேசிய நெடுஞ்சாலையை அருகே இவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. அதில் கடந்த 15 ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறார். கடைக்கு பின்னால் ஒரு பகுதியை ஷூ கம்பெனிக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை சத்தியமூர்த்தி கடையை திறந்து உள்ளே சென்றவர் அதிர்ச்சி அடைந்தார். பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அங்கிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருந்தன. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கடையின் பின்பக்கத்தில் உள்ள ஷூ கம்பெனி வழியாக நுழைந்து அடகுகடை சுவற்றில் துளைபோட்டு உள்ளே புகுந்து நகைகளை திருடிச் சென்றனர்.

இந்த துணிகர திருட்டு குறித்து ஆம்பூர் போலீசில் அவர் புகார் செய்தார். விசாரணையில் ஒரு கோடியே 25 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சத்தியமூர்த்தி மற்றும் அவரது உதவியாளர் ராமு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தட ய அறிவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் சோதனையும் நடந்தது. இந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment