Tuesday, January 31, 2012

உணவு உற்பத்தி 100 லட்சம் டன்னாக உயரும்!

Tuesday, January 31, 2012
சென்னை::மேட்டூர் அணையிலிருந்து முன் கூட்டியே பாசனத்திற்காக நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டதால், மாநிலத்தில் அபரிமிதமான குறுவை விளைச்சல் ஏற்பட்டது. இதனால், கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட 75.95 லட்சம் டன் என்ற அளவை விஞ்சி இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி முதல் முறையாக 100 லட்சம் டன் அளவை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமங்களில் வரவேற்பு: விலையில்லா கறவைப் பசுக்கள், ஆடுகள் வழங்கும் இந்த அரசின் சிறப்புத் திட்டங்கள் கிராமப்புற ஏழை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. சுமார் 1.12 லட்சம் குடும்பங்கள் 2011 ,2012ம் ஆண்டில் இந்தத் திட்டங்களால் பயன் பெறும். புதிய ஒருங்கிணைந்த காப்பீடு 1.34 கோடி குடும்பங் கள் பயன்: புதிய ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 1.34 கோடிக்கும் மேலான குடும்பங்கள் பயன்பெறுகின்றன.

பேறுகாலத்தில் தாய் இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் போன்றவற்றை மேலும் குறைக்கும் நோக்குடன், விரிவான மகப்பேறு அவசர சிகிச்சைப் பிரிவுகள் வலுப்படுத்தப்பட்டதுடன், பச்சிளம் குழந்தைகளுக்கான 41 புதிய அவசர சிகிச்சைப்பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதுமட்டு மின்றி, ஏழை தாய்மார்களின் மகப்பேறு உதவித் தொகையை நாட்டிலேயே மிக உயரிய அளவாக 12,000 ரூபாய் என அரசு உயர்த்தியுள்ளது.

சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் மேலும் 5 லட்சம் பயனாளிகள்: நாட்டிலேயே உயர் அளவாக, சமூகப் பாதுகாப்பு உதவித் தொகையை இரட்டிப்பாக தமிழக அரசு உயர்த்தியது. 5 லட்சம் புதிய பயனாளிகள் சமூகப் பாதுகாப்பு உதவித் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, முறைகேட்டைத் தடுக்கும் வண்ணம், அவரவர் வங்கிக்கணக்கின் மூலமாக நேரடியாகப் பணப்பட்டுவாடா செய்யவும்வ கைசெய்யப்பட்டுள்ளது. ஆதரவற்ற, ஒதுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான ஒரு சமூகப்பாதுகாப்பு உதவித் திட்டத்தை தமிழ்நாடு பெற்றிருப்பதை இத்தகைய முயற்சிகள் உறுதி செய்யும்.

சுற்றுலாவில் தனியார்: ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியில் ஒருங்கிணைந்த சுற்றுலா உள்கட்டமைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அரசு தனியார் பங்களிப்புடன் தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான கொள்கை வரும் ஆண்டுகளில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

பட்டா மாறுதல் பலன்: அரசால் கொண்டு வரப்பட்ட விரைவுவழி பட்டா மாறுதல் திட்டம் நல்ல பயனை அளித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 50 விழுக்காடு பட்டா மாறுதல்கள் நடந்துள்ளன.நில அபகரிப்பு நடவடிக் கை தொடரும்: நில அபகரிப்பு மீதான நடவடிக்கை குறித்து ஆளுநர் உரையில்:

பலவந்தமாக அபகரிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நிலங்கள் இந்த அரசால் ஒவ்வொரு மாவட்டத் திலும் அமைக்கப்பட்ட நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவுகளால் மீட்டளிக்கப் பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களை அச்சுறுத்தி சுரண்டும் இத்தகைய நில அபகரிப்பாளர்களை சட்டத்தின்முன் கொண்டு வந்து உரிய நீதியை வழங்க இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.

மாணவர் விடுதிகளுக்கு சொந்த கட்டிடங்கள்

சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் பழங்குடியினர் போன்றவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விடுதிகளில் தங்கிப் பயிலும் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான உணவு மானியம் இந்த அரசால் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வாடகைக் கட்டடங்களில் தற்போது இயங்கிவரும் அனைத்து விடுதிகளுக்கும் சொந்தக் கட்டடம் கட்டித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் ரோசய்யா உரையில் பல அம்சங்களும் இங்கே தனித்தனியாக தரப்பட்டுள்ளது.

தமிழ் ஆட்சிமொழியாக...

தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். திருக்குறள், தெரிந்தெடுக்கப்பட்ட பாரதியார் மற்றும் பாரதிதாசன் படைப்புகளை சீன மற்றும் அரேபிய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறந்த தமிழ் அறிஞர்களின் படைப்பு களைப் பாதுகாத்து, அவற்றை அனைவரிடத்தும் கொ ண்டு செல்லும் வகையில் நாட்டுடைமையாக்கப்பட்ட 1,472 புத்தகங்கள் தமிழ் இணைய பல்கலைக்கழக இணையதளத்தில் அரசால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசு , தனியார் பங்களிப்பு விரைவில் கொள்கை அறிவிப்பு

சென்ற ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்றவுடன் தொலைநோக்குத் திட்டம் 2025 தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான திட்ட அறிக்கையை முதல்வர் விரைவில் வெளியிட இருக்கிறார். முக்கியமான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி என்ற ஒன்று தனியாக இந்த அரசால் ஏற்படுத்தப்படும். இந்த வகையில், திட்ட செயலாக்கத்தில் அரசு மற்றும் தனியார் நிதி ஆதாரங்களை ஒருங்கிணைக்க அரசு ­தனியார் பங்களிப்புக் கொள்கை ஒன்றை இந்த அரசு விரைவில் வெளியிடும்.

கச்சத்தீவை திரும்ப பெறுவோம்

கச்சத்தீவு தொடர்பாக ஆளுநர் உரையில்: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் இந்த அரசுக்கு ஆழ்ந்த கவலையளிப்பதாக உள்ளது. நமது ஆட்சேபங்களுக்குப் பிறகும் இந்நிகழ்வுகள் தொடர்கின்றன. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண இலங்கையிடம் மத்திய அரசு கடுமையாக வலியுறுத்த வேண்டும்.

பாக் வளைகுடாப் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்கவும் ,அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கவேண்டும் என்று, இந்த அரசுகேட்டுக்கொள்கிறது. கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதன் மூலமே தமிழக மீனவர்கள் இழந்த உரிமையை மீளப்பெற இயலும் என்ற இந்த அரசின்உறுதியான முடிவினை இத்தருணத்தில் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

மாநகரங்களில் பெருந்திட்டம்

புறநகர்ப்பகுதிகள் இணைக்கப்பட்டு, சென்னை மாநகராட்சி தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுபோலவே, ஏழு பிற மாநகராட்சிகள் மற்றும் எட்டு நகராட்சிகளின் எல்லைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புர உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவைப்படும் கூடுதல் நிதி ஆதாரத்தைப் பெறுவதற்காக சென்னைப் பெருநகர வளர்ச்சி இயக்கம் ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி இயக்கம் ஆகியவற்றை இந்த அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது.

சாலைகள், தெருக்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களை மேம்படுத்துவதுடன் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை முறைகளைச் செயல்படுத்தவும் இந்த அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும். பெருந்திட்டம் இல்லாத விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் புதிதாக பெருந்திட்டம் தீட்டப்படும்.

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதை மாநிலம் தழுவிய மக்கள் இயக்கமாக மேற்கொள்ள ரூ.5 கோடியும், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பரிசோதனை அடிப்படையில் தார் சாலைகளை அமைப்பதற்கு ரூ.50 கோடியும் இந்த அரசு கடந்த பட்ஜெட் அறிக்கையில் ஒதுக்கியிருந்தது. இம்முயற்சியின் விளைவாக, பிளாஸ்டிக்கழிவுகளைக் கொண்டு 50 கோடி மதிப்பீட்டில் சுமார் 146 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுத்து, நீடித்த பயன் தரும் இது போன்ற சாலைகளை பெருமளவில் அமைக்க விரிவான தொரு திட்டம் செயல்படுத்தப்படும்.

நொய்யல் தீர்வு நானோ

நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் பொருட்டு, பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை மீண்டும் செயல்படச் செய்ய அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுத்துவருகிறது. அருள்புரம் பொதுக்கழிவு சுத்திகரிப்பு ஆலையில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் கழிவுநீரே வெளியேறாத நிலையை எய்தக் கூடிய நானோ வடிகட்டல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மூடிக்கிடக்கும் பொது சுத்திகரிப்பு நிலையங்களை மீண்டும் செயல்படவைக்க வட்டியில்லாக்கடனாக 179 கோடி ரூபாயை இந்த அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது.

இதுதவிர, நீதிமன்றத்தால் இழப்பீட்டுத் தொகை உறுதி செய்யப்படுவதை எதிர்நோக்கி, நொய்யல் பாசனப்பகுதி விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு 75 கோடி ரூபாய் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சம்பந்தப்பட்ட தொழில் அதிபர்கள் மற்றும் விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

4,704 மெகாவாட் மின்சாரம்

கடன் சுமையால் மூழ்கும் நிலையிலுள்ள மின்வாரியத்திற்கு புத்துயிரூட்ட ரூ.2,600 கோடி பங்கு மூலதனமாகவும், 955 கோடி கடனாகவும் அரசு வழங்கியுள்ளது. மின் உற்பத்தியை அதிகப்படுத்தவும், பற்றாக்குறையை குறைக்கவும் அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்ய நிறுவப்பட்ட 556 மெகாவாட் தவிர, மாநில தொகுப்பில் 30 மெகாவாட்டும், மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் பங்காக 113 மெகாவாட்டும் கூடுதல் மின் உற்பத்தித்திறனாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4,704 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும் வகையில் புதிய திட்டங்கள் செயல்பட தொடங்கும்.

நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டம்

நகர்ப்புரங்களில் நிலவும் அதிக வறுமை நிலையைப் போக்குவதற்கான ஒருங்கிணைந்ததிட்டம் ஒன்று வரும் பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்படும். வறுமை, வேலையின்மையோடு தொடர்புடைய பிரச்னையாகும். திறன்மேம்பாட்டுப் பயிற்சியின் மூலமாக இளைஞர்களை வேலைவாய்ப்பு பெறும் தகுதியுடையவர்களாக உருவாக்குவதையும், புதியதொழில் முனைவோரை ஊக்குவித்து வேலைவாய்ப்பைப் பெருக்குவதையும், இருமுனை நடவடிக்கைகளாக இந்தஅரசு செயல்படுத்தி வருகிறது. திறன் வளர் பயிற்சிகளையும் பயிற்சி மையங்களையும் தேர்ந்தெடுத்தல் மற்றும் பயிற்சிகளைக் கண்காணித்தல், பயிற்சி பெற்றவர் வேலைவாய்ப்பைப் பெறும்வரை கண்காணித்தல் போன்றவை ஒரே அமைப்பின்கீழ் கொண்டு வரப்படும்.

வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1.85 லட்சம் கோடி
திட்ட வடிவமைப்பில் சுதந்திரம் தேவை

மந்தமான வளர்ச்சி, தொடர்ந்து காணப்படும் அதிக பணவீக்க அளவு, சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு, உயர்ந்து வரும் வட்டி விகிதம் ஆகியவை நாம் உயர்வளர்ச்சி இலக்கை எட்டுவதற்கு தடை கற்களாக உள்ளன. இதன் விளைவாக, முதலீடுகள் குறைந்து வருவதுடன் தேசிய அளவில் 2011,2012ம் ஆண்டிற்கான வளர்ச்சி மதிப்பீடு கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொருளாதார மந்த நிலையின் எதிர் மறை விளைவுகளால் மாநிலப் பொருளாதாரம் பாதிக்கப்படுவது தவிர்க்க இயலாதது ஆகும்.
இந்த எதிர்மறை சூழ்நிலைகளுக்கு இடையிலும், உள்கட்டமைப்புக்கும் சமூகப் பாதுகாப்புக்கும் எவ்வித குறைவுமின்றி போதிய நிதியை ஒதுக்கீடு செய்வதில் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. வரும் 12வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், இந்த அரசு 1,85,000 கோடி ரூபாயைத் திட்டப்பணிகளுக்கு செலவிட திட்டமிட்டுள்ளது.

இது 11வது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் செலவிடப்பட்ட 85,000 கோடி ரூபாயை விட இரண்டு மடங்குக்கும் அதிகமானதாகும். இந்த உயர் இலக்கு தமிழ்நாட்டை மீண்டும் துரித வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும். மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்டங்களை இயற்ற தொடர்ந்து முயற்சி செய்து வருவதும், திட்டங்களை வடிவமைப்பதில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான அணுகு முறையைத் திணிப்பதும் மத்திய மாநில உறவுகளில் ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்பட வழிவகுக்காது.

இணக்கமான செயல் முறையைப் பின்பற்றி, பரந்த குறிக்கோள்களை மட்டும் மத்திய அரசு நிர்ணயிக்கவேண்டும் என்றும், அத்தகைய திட்டங்களில் மத்திய நிதியுடன் மாநிலத்தின் நிதியையும் ஒருங்கிணைத்து, மாநிலங்களின் தேவைகளுக்கேற்ப, அந்தந்த மாநில அரசுகளுக்கே திட்டங்களை வடிவமைக்கும் சுதந்திரத்தை அளிக்க வேண்டும் என்றும் இந்த அரசு வலியுறுத்துகிறது.

மோனோ ரயில் விரைவில் டெண்டர்

2011,2012ம் ஆண்டில், 539.83 கோடி ரூபாய் செலவில் 3,000 புதிய பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், முதல் முறையாக இன்ஜின், அடிச்சட்டம் ஆகியவை நல்ல நிலையில் உள்ள 1,432 பழைய பஸ்களின் மறு கட்டுமானத்துக்கு 97.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சிகள் போக்குவரத்துக் கழகங்களின் செயல் திறனை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க உதவும் என நம்புகிறேன். சென்னையில் ஒருங்கிணைந்த பன்முறை நகர் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கத்தில், மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

அரசு ஆபீஸ்கள் உறுதி தன்மை ஆராய வல்லுனர் குழு

சேப்பாக்கம் அரசு அலுவலக வளாகத்தில் ஜனவரி 15ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தை போன்று வருங்காலங்களில் நிகழாது தவிர்க்கும் வகையில், அரசு அலுவலகங்கள் செயல் படும் அனைத்து தொன்மையான கட்டடங்களின் கட்டமைப்பு உறுதித்தன்மையை மதிப்பீடு செய்ய ஒரு வல்லுநர்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுநுழைவு தேர்வு எதிர்ப்பு தொடரும்

கற்றல் முறையை எளிதாக்கவும், மாணவர்களின் சுமையை குறைக்கவும், 2012, 2013ம் கல்வியாண்டு முதல் முப்பருவ முறையை எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில், 11 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 34 அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு மடிகணினி: மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்த, விலையில்லா மடிக்கணினி வழங்கும் மாபெரும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்விகளுக்கு, மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள பொது நுழைவுத் தேர்வு முறை நமது மாணவர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் அதை நாம் தொடர்ந்து எதிர்ப்போம்.

No comments:

Post a Comment