Friday, January 6, 2012

புயல் பாதித்த புதுவை-கடலூரில் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்கும் நித்யானந்தா ஆசிரமம்!

Friday, January 06, 2012
இலங்கை::புதுச்சேரி: புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், புதுவையில் நித்யானந்தாவின் ஆசிரமம் சார்பில் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு சமைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் சுமார் 1,000 பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் புயலால் பாதிக்கப்பட்ட புதுவைக்கு வந்த நித்தியானந்தா, நிவாரணப் பணிகள் மேற்கொள்ள எனது ஆசிரமம் சார்பில் ரூ.98 லட்சம் வழங்கப்படும். முதல் கட்டமாக ரூ.25 லட்சம் செலவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, போர்வை ஆகியவற்றை எனது ஆசிரமத் தொண்டர்கள், தன்னார்வ தொண்டர்கள் மூலம் வழங்கி வருகின்றனர்.

இது தவிர தொண்டர்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் புயலால் சாய்ந்துள்ள மரங்கள் மற்றும் குப்பைகளை அகற்றி வருகின்றனர் என்றார்.

இந் நிலையில் புதுவை மாநிலம் ஏம்பலத்தில் உள்ள நிதியானந்தாவின் தியான பீடம் உணவு வினியோகப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிகளை நித்யானந்தாவே நேரில் மேற்பார்வையிட்டு வருகிறார்.

வெளிநாடுகளைச் சேர்ந்த 35 பேர் உள்பட 600 பக்தர்கள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். அவர்களும் புதுச்சேரியை சேர்ந்த 400 பக்தர்களும் இணைந்து ஆசிரமத்திலேயே பெரிய சமையல் கூடத்தை உருவாக்கி நூற்றுக்கணக்கான பாத்திரங்களை வைத்து உணவு சமைத்து வருகின்றனர்.

தினமும் 1 லட்சம் உணவு பொட்டலங்கள் தயாரித்து அருகில் உள்ள புதுவை, கடலூர் மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

இதற்காக பல்லாயிரம் கிலோ காய்கறிகள், அரிசி மூட்டைகள், உணவு தானியங்கள் குவிக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் சமையல் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளை நித்யானந்தாவே நேரில் கண்காணித்து வருகிறார்.

உணவு கொண்டு செல்ல சுமார் 20 வேன்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இந்த உணவுப் பொட்டலங்களை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றி, நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் வழங்கி வருகின்றனர்.

அதே போல ஏராளமான புல்டோசர்கள், பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு கிராமங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். மின் இணைப்பு இல்லாத ஊர்களில் ஜெனரேட்டர்களை கொண்டு வந்து குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி வீடுகளுக்கு சப்ளை செய்தும் வருகின்றனர்.

மேலும் 25,000 பேருக்கு உடைகளையும் போர்வைகளையும் வழங்கியுள்ளதோடு, மருத்துவர் குழுவினரைக் கொண்டு சிகிச்சையும் அளித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment