Saturday, December 3, 2011

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வை முன் வைக்க வேண்டும் இல்லையேல் அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்-புரொன்ட் லைன்!

Saturday, December 03, 2011
தமிழர்கள் பிரச்சினைக்கு இலங்கை எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன் வைக்காவிட்டால், அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டியேற்படும். இவ்விடயத்தில் மேலும் இந்தியா உதவி புரிய முடியாத நிலை ஏற்படும் என இந்தியச் சஞ்சிகையான புரொன்ட் லைன் தெரிவித்துள்ளது.

நான்காம் கட்ட ஈழப்போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரும் ஐ.நாவானது மனிதாபிமான பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்தத் தவறியுள்ளதா என்பது தொடர்பாக ஆராய ஐ.நா மக்கள் நிதியத்தின் முன்னாள் தலைவரான தோரயா ஒபெய்ட் செப்டெம்பர் 24 திகதியன்று நியமிக்கப்பட்டார்.

எதிர்வரும் ஜனவரியில் இவரது அறிக்கை தயாரிக்கப்பட்டு விடும். இந்த அறிக்கை, இலங்கை விவகாரத்தில் ஐநாவுக்கு மேலும் பலத்தைச் சேர்ப்பதாகவே அமையும். இதனை எதிர்ப்பதென்பது இலங்கைக்கு மிகக் கடினமான விடயமாகும்.

இதேவேளை இலங்கை மீதான தமது அழுத்தத்தை அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகள் கைவிடப்போவதில்லை. இந்தியாவானது இலங்கையுடன் இது தொடர்பில் பேச்சுக்களை மேற்கொள்ள முயற்சிக்கின்றது. அனைத்துலக அரங்கில் இலங்கையை ஆதரித்தே இந்தியா செயற்பட்டு வருகின்றது.

முன்னதாக மே 2009 இல் புலிகள் உத்தியோக பூர்வமாகத் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த மாதங்களில் இலங்கைப் படைகளாலும், புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா பொதுச் செயலரால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் ஏப்ரல் 2011 அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டு இப்போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ' அனைத்துலக சுயாதீனப் பொறிமுறை' ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என இவ்வல்லுனர் குழு பந்துரைத்திருந்தது.

ஆனால் இலங்கையில் வல்லுனர் குழுவின் அறிக்கை விமர்சிக்கப்பட்டதுடன், இக்குழுவின் தலைவரான மார்சுகி தாருஸ்மன் 'இலங்கையருக்கு எதிரான உணர்வுகளைக்' கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது 'தாருஸ்மன் அறிக்கை' என்பதால் தட்டிக்கழிக்கப்பட்டதுடன், ஐ.நா அறிக்கையாக இதனை ஏற்றுக் கொள்ளவும் இலங்கை மறுத்து விட்டது. தமது அறிக்கையை இறுதியாக்குவதற்கு முதல் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள ஐ.நா வல்லுனர் குழுவினர் தீர்மானித்த போதிலும், இது நடை பெறவில்லை.
இவ் அறிக்கையை இலங்கை அரசாங்கம் தட்டிக்கழித்த போதும், ஐ.நா அமைப்பு இதனை முக்கிய அறிக்கையாக ஏற்றுக்கொண்டது.

இப்பரிந்துரைகளின் அடிப்படையில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐ.நா அமைப்புக்களால் மேற்கொள்ளத் தவறிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கே தோரயா ஒபெய்ட் நியமிக்கப்பட்டார்.

அவருடைய அறிக்கை ஜனவரியில் வெளியாகும். அதேவேளை எதிர்வரும் மார்ச்சில் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆகவே பிறக்கப் போகும் புத்தாண்டு இலங்கைக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழர்கள் பிரச்சினைக்கு இலங்கை எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன்வைக்காவிட்டால், அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு அது முகங்கொடுக்க வேண்டியேற்படும். இவ்விடயத்தில் மேலும் இந்தியா உதவி புரிய முடியாத நிலை தோன்றும் எனவும் புரொன்ட் லைன் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதிக்கு மிகவும் வேண்டப்பட்ட ஊடகவியலாளரான என்.ராமை ஆசிரியராகக் கொண்ட புரொன்ட்லைன் சஞ்சிகையே மேற்கண்டவாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment