Friday, December 2, 2011

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி போராளிகளை மீண்டும் இருண்ட யுகத்திற்கு அழைத்துச் செல்ல வெளிச்சக்திகள் முயற்சி-சந்திரசிறி கஜதீர!

Friday, December 02, 2011
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி போராளிகளை மீண்டும் இருண்ட யுகத்திற்கு அழைத்துச் செல்ல வெளிச்சக்திகள் முயற்சித்து வருதாகவும் இதன் ஓர் அங்கமாகவே அனுராதபுரம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளிச்சக்திகள் போலிக் கதைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர குறிப்பிடுகின்றார்.

அமைச்சின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்

அநுராதபுர சிறையில் சிறைக்கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் எவ்வித உண்மையும் இல்லை.புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு அநுராதபுர சிறைச்சாலையை சோதனை நடத்த சிறைச்சாலை ஊழியர்கள் கருதினர். சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது 'புலிகளின் மாவீரர் தினம் கார்த்திகை 27' என்று வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டியும், சுமார் பத்தொன்பது கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.

இந்தத் தொலைபேசிகளில் மூன்று 3ஜி கையடக்கத் தொலைபேசிகளும் இருந்தன. புனர்வாழ்வளிக்கப்படுவது தொடர்பாக பல சலுகைகளை அரசு செய்துவரும் வேளையில், இத்தகைய முயற்சிகள் மனமாற்றத்தையே ஏற்படுத்தும். இவர்கள் பழைய போர்ச்சூழலை மீண்டும் உருவாக்க நினைக்கின்றார்கள். யுத்தம் முடிவடைந்து பின்னர் பல இளைஞர், யுவதிகள் மற்றும் சிறார்கள் புனர்வாழ்விற்காக சரணடைந்தார்கள். அவர்களை 29 புனர்வாழ்வு நிலையங்களின் ஊடாக புனர்வாழ்வு, கல்வி, சுயதொழில் எனப் பல முயற்சிகளை வழங்கினோம். தற்போது நான்கு புனர்வாழ்வு நிலையங்களில் 723 முன்னாள் புலி போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டுவருகின்றனர்.

அதேவேளை, இந்த மாதம் 11ஆம் திகதி 100 புலி போராளிகள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளோம். இந்தப் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி போராளிகளின் மூலமாக கிரிக்கெட், கால்பந்து, கரப்பந்து மற்றும் இசைக்குழுக்களை உருவாக்கி சமூகத்தோடு இணைத்துள்ளோம். இந்த வரவுசெலவுத்திட்டத்தில் 50 கோடி ரூபா ஒதுக்கீட்டை சிறைச்சாலை அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பிற்காக ஜனாதிபதி ஒதுக்கியுள்ளார் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment