Thursday, December 8, 2011

இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வு என்பது பழங்கதையாகி வரும் போக்கு காணப்படுகிறது. இதற்கு பேரினவாத அரசியலின் இழுத்தடிப்பு மாத்திரமல்ல தமிழ் தலைமைத்துவங்களின் அலட்சிய மனோபாவமும் காரணமாகும்-தி.ஸ்ரீதரன் (பத்மநாபா ஈபிஆர்எல்எப்)

Thursday,December,08,2011
இலங்கை:இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வு என்பது பழங்கதையாகி வரும் போக்கு காணப்படுகிறது. இதற்கு பேரினவாத அரசியலின் இழுத்தடிப்பு மாத்திரமல்ல, தமிழ் தலைமைத்துவங்களின் அலட்சிய மனோபாவமும் காரணமாகும்.

அமெரிக்காவில் பேசுகிறோம். இங்கிலாந்தில் பேசுகிறோம் என்று சொல்லிக் கொண்டு உள்ளுரில் நடைமுறை சார்ந்த செயற்பாடுகளில் அக்கறை காட்டாமல் இருப்பதும் இதற்கு காரணமாகும்.

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தாம் அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளுக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எமது பிரச்சினை பற்றி விரிவாக எடுத்துரைத்தாகவும்,

அதேபோல் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பேசியது, கேள்விகளுக்கு பதிலளித்தது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

நல்ல விடயம்! ஆனால் பிரச்சினை இலங்கையில் தீர வேண்டும். அதற்கு உள்நாட்டில் மற்றும் உப கண்ட பிராந்திய மட்டத்திலேயே முயற்சிகள் பிரதானமாக தேவைப்படுகின்றன.

உள்ளுரில் மக்களின் அன்றாட அவலங்கள், துயரங்கள், நெருக்கடிகள் இவற்றுக்கான தீர்வுகள் பற்றி உள்ளுர் சக்திகளை வழிக்குக் கொண்டுவரும் முயற்சிகள் பிரதானமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

முதலாவது தமிழ் முஸ்லீம், மலையக அரசியல் சக்திகளிடையே புரிதல் வேண்டும்.

இரண்டாவது சிங்களவர்களிடையே அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான சக்திகளுடன் கலந்துரையாட வேண்டும் ஒருங்கிணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஊக்கப்படுத்துதல் தெற்கில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அது அவர்கள் பாடு என விட்டுவிட முடியாது. அங்கு மாற்றம் நிகழாமல் தமிழ் மக்களின் வாழ்வில் மாற்றம் நிகழாது.

அந்த மாற்றத்தை நிகழ்த்துவதற்கு நாமும் முயல வேண்டும்.

இராணுவ மயமாக்கல் ,பலவீனமடைந்துவரும் ஜனநாயகம் ,பொலிஸ் ஆட்சி போன்ற நிலைமைகள் தென்னிலங்கையில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன.

ஊடக சுதந்திரம் ஜனநாயக மயப்பட்ட வாழ்க்கையின் தேவை தெற்கிலும் உணரப்படுகிறது.

எனவே தென்பகுதி மக்களின் மனங்களை வென்றெடுப்பது எமது பிரச்சினை தீர்வின் பிரதான அம்சம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இலங்கை ஜனநாயக மயப்பட்டால்தான் எமது வாழ்வும் ஜனநாயக மயப்படும். தமிழ் மக்களின் வாழ்வு ஜனநாயக மயப்பட்டால்தான் இலங்கை ஜனநாயக மயப்படும். இந்த இயக்கவியல் தொடர்பு விளங்கிக் கொள்ளப்படல் வேண்டும்.

பொருளாதார அபிவிருத்தி என்பதும் அவ்வாறுதான்.

இனவாத அரசியல் இருக்கும் வரை, உற்பத்தியில் சம்பந்தமில்லாத இராணுவ மயமாக்கல் இருக்கும் வரை, மக்களின் சுதந்திர சிந்தனைக்கு தடைபோடும் கொடூர சட்டங்கள் இருக்கும் வரை பொருளாதார சமூக அபிவிருத்தி என்பது நினைத்துப் பார்க்க முடியாதது.

அந்தந்த சமூகங்களின் தனித்துவங்கள் ,நம்பிக்கைகள், அனுபவங்கள், கலாச்சாரம், மொழி என்பன மதிக்கப்படல் வேண்டும். அனுசரிக்கப்படல் வேண்டும்

சமூக முன்னேற்றத்திற்கு தடையில்லாத அனைத்து தனித்துவங்களும் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

தனி நபர் சுதந்திரமும் அவ்வாறுதான்.

தனி மனிதனை நடைப்பிணமாக்கி ஒரு நாடு முன்னேற முடியாது. அது தூங்கி வழிகின்றதாகவும் , ஊழல் மிகுந்ததாகும். கொலை கொள்ளைகளின் நிரந்தர இருப்பிடமாகவும் மாறிவிடும்.

இங்குதான் சுதந்திரம் ,சமத்துவம், சகோதரத்துவம் என்ற பிரெஞ்சுப் புரட்சியின் வாசகங்கள் மீண்டும் மீண்டும் உணரப்படுகின்றன.

சுதந்திரம் என்பது எல்லாவற்றையும் விட பெரிய விடயம். எகிப்திலும், டூனீசியாவிலும் ,யேமனிலும் ,மியன்மாரிலும் நிகழ்ந்த நிகழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் கிளர்ச்சிகள் அதனைத்தான் உணர்த்துகின்றன.

சமூக- பொருளாதார -அரசியல் சுதந்திரம் என்பதன் விரிவான அர்த்;தத்திற்கு செல்வோமானால் ஏதென்ஸ்ஸிலும் வோல் ஸ்ரீட்டிலும் நடப்பவையும் சுதந்திரத்திற்கானவைதான்.

மக்களின் அரசியல் பொருளாதார சமூக சுதந்திரத்திற்கான எழுச்சிகள் உலகின் பல்வேறு நகரங்களில் நிகழ்கின்றன.

இராணுவ மயமான மனோபாவம் கொண்ட ஆட்சியாளர்களும், சரி பெருவாரியான மக்களை சுரண்டி ஏப்பம் விட்டு ஐஸ்வரியங்களை அனுபவிக்கும் உலகளாவிய பல்தேசிய பெரு முதலாளி வர்க்கமும் அவற்றின் முகவரான அரசுகளும் சரி தமது நலன்களை விட்டுக்கொடாது. தானாக திருந்தாது.

இந்த உலகம் அழியப் போகிறது எதுவும் மிஞ்சாது என்ற நிலையிலும் சரி அது திருந்தாது

உலகளாவிய மனித உரிமை அமைப்புக்களும் சரி, ஊடகங்களும் சரி ஒரு வரையறைக்குள்தான் மக்களின் ஜனநாயகம், சுதந்திரத்தை பற்றி பேசுகின்றன.

தாம் சார்ந்து நிற்கும் பல்தேசிய பெரு முதலாளிகளின் நலன்களுக்கு எதிராக அவை அதிகம் பேசப்போவதில்லை.

அரசு சார்பற்ற நிறுவனங்கள் என்று சொல்லப்படுகின்றவையும் பெரும்பாலும் அவ்வாறுதான்.

இத்தகைய சூழ்நிலையில் வறிய நாடுகள் ,மூன்றாம் உலக நாடுகள் என்று சொல்லப்படுபவற்றில் மத ,இனவாத போதைகளை ஏற்றி மிலேச்சத்தனமான ஆட்சி முறைகள் உருவாகின்றன. இதற்கு சட்டங்களோ நெறிமுறைகளோ தேவையில்லை.

இத்தகைய போக்கை நாம் உலகலாவிய அளவில் பரவலாக அவதானிக்க முடியும்.

எங்கு மக்களின் வாழ்வு ஜனநாயக மயப்படுத்தப்படுகிறதோ அந்த நாடு முன்னேற்றப்பாதையில் செலல முடியும்.

இலங்கையில் அது அதிகாரப்பகிர்வின் ஊடாக ,ஒட்டு மொத்த இலங்கையின் வாழ்வும் ஜனநாயக மயப்படுத்துவதன் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதற்கு சர்வதேச அளவில் சௌகரியமான சுலபமான வழியில் ஈடுபட்டு மட்டும் சரிபட்டு வராது தகிக்கும் உள்ளுர் மக்கள் சார்ந்த வேதனைகள் உணரப்படல் வேண்டும். உள்நாட்டு மட்டத்தில் பிராந்திய மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மனிதர்களிடையே கசப்புணர்வுகளை விதைக்காத குரோதத்தை ஏற்படுத்தாத நம்பிக்கைகளின் ஊடாகவே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதற்காக அண்டை நாட்டிலிருந்து பல்வேறு அனுபவங்களை நாம் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அது மிகப் பெறுமதி வாய்ந்தது.

பல்லினங்களின் ஜனநாயக நாடாக இலங்கையின் இருத்தல் முதன்மையானது.

நாம் அங்கிருந்தே தொடங்க வேண்டும்.

இலங்கையின் தலைவர்கள் இது பற்றி காழ்புணர்வின்றி ஆழமாக சிந்திக்க வேண்டும்.

தமிழர்களின் பிரச்சினை புலம் பெயர்ந்த ஒரு பகுதியினரின் பொழுது போக்காவதால் உள்நாட்டில் நெருக்கடிகள் அதிகரிக்கின்றன.

நடைமுறைக்கு ஒவ்வாத முறையில் தமது விருப்பங்களுக்கேற்ப அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி பேசி வருகிறார்கள்.

அவர்களுடைய புலம் பெயர் இருப்பின் அடிப்படையிலேயே அவர்கள் பிரச்சினையை அனுகுகிறார்கள்.

தமது நலன்களுக்காக இலங்கையில் தமிழர்களின் அரசியல் மீது செல்வாக்கு செலுத்த முனைகிறார்கள்.

இதனால் சமூகத்தினுள் இடைவெளி அதிகரித்துச் செல்கிறது. எமக்கு நாமே எதிரிகள் என்ற நிலை தோற்றுவிக்கப்படுகிறது. இன்று தமிழர்களுக்கு நிற்பதற்கோர் இடம் வேண்டும். அந்த இடம் சொந்த நாட்டில் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சமான சூழ்நிலை நிலவுகிறது. இதனையே இந்தச் சக்திகள் விரும்புகின்றன.





எது எமது சமூகத்துக்கு சிறப்பானதோ அதனை செய்ய முயல்வோம்.

தி.ஸ்ரீதரன்
பத்மநாபா ஈபிஆர்எல்எப்

No comments:

Post a Comment