Sunday, December 4, 2011

நக்சல்கள் மீண்டும் அட்டகாசம் ஜார்கண்டில் தண்டவாளம் தகர்ப்பு

Sunday, December 04, 2011
ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை நக்சல்கள் குண்டு வைத்து தகர்த்தனர்.
மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்தின் மூன்றாம்கட்ட தலைவராக இருந்த கிஷன்ஜி, கடந்த 24-ம் தேதி, மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்றிரவு முதல் 48 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு மாவோயிஸ்ட்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு ஒரு மணி அளவில், ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் தும்ரி பீகார் - கோமியா இடையிலான ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்ட்கள் குண்டு வைத்து தகர்த்தனர். அதேபோல லடேகர் மாவட்டம் ஹேக்ரா - சிபாதோகர் இடையிலான தண்டவாளத்தையும் மாவோயிஸ்ட்கள் குண்டு வைத்து தகர்த்தனர்.
இந்த சம்பவங்களில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 12-க்கும் அதிகமான ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. பாக்கூர் மாவட்டத்தில் 3 லாரிகளை மாவோயிஸ்ட்கள் தீ வைத்து கொளுத்தினர். ஹஜாரிபாக் மாவட்டத்திலும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
லடேகர் மாவட்டத்தில் நேற்று மாலை மக்களவை எம்.பி. இந்தர்சிங்கின் பாதுகாப்பு வாகனம் மாவோயிஸ்ட்கள் வைத்த கண்ணி வெடியில் சிக்கியது. இந்த தாக்குதலில் இன்ஸ்பெக்டர் உள்பட 8 போலீசார் மற்றும் 2 பேர் உடல் சிதறி பலியாயினர். இந்தர்சிங் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

No comments:

Post a Comment