Monday, December 26, 2011

சுனாமி நினைவு தினம் ராயபுரத்தில் மக்கள் ஊர்வலம்!

Monday,December, 26,2011
தண்டையார்பேட்டை, - சுனாமி நினைவு தினத்தையொட்டி ராயபுரத்தில் இன்று அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சென்றனர். சபாநாயகர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
சுனாமி பேரலையின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை காசிமேடு, உள்ளிட்ட கடற்கரை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இந்த சுனாமி பேரலையில் உயிரிழந்தனர். இதை அனுசரிக்கும் விதமாக பல்வேறு மீனவர்கள் அமைப்பு சார்பில் காசிமேட்டில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டது.

18 கிராமங்களின் பஞ்சாயத்து சபை சார்பில் சென்னை ராயபுரம் மீன் மார்க்கெட்டில் இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலத்தில் சபாநாயகர் ஜெயக்குமார், அதிமுக மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், மண்டல குழு தலைவர்கள் பழனி, கார்த்திகேயன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி சென்ற அவர்கள், காசிமேடு கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தி கடலை வணங்கினர்.

விசைப்படகு மீனவர் நலச்சங்கம் சார்பில் சென்னை காசிமேடு மீன்வளத்துறை அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலம், காசிமேடு கடற்கரையை அடைந்தது. அங்கு கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தலைவர் ரகுபதி, இந்திய மீனவர் நலச்சங்க தலைவர் தயாளன் மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் கபிலன், ஆதிமூலம், சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சுனாமியில் இறந்தவர்கள் புதைக்கப்பட்ட காசிமேடு மயானத்தில் அவர்களது உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment