Friday, December 09, 2011இலங்கை: எதிர்காலத்தில் எமது சமூகம் பயணிக்கவேண்டிய முறைமைகள் பற்றி திட்டமிடுவதற்கு கட்டாயம் நாம் எமது கடந்தகால வரலாறுகளை கற்றே ஆக வேண்டும். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கற்றுக்கொள்ளவில்லை என்பது வேதனையளிக்கின்றது என கிழக்கு மாகாண முதலைமச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை காலை கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு இருதயபுரம் இருதயாண்டவர் மண்டபத்தில் நடைபெற்ற இலவச பாடநூல் விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், மக்களின் ஏகோபித்த தலைவர்கள் எனக் கூறுபவர்களுக்கு இலங்கையின் வரலாறு தெரியவில்லை என்பது உண்மையில் வேதனையளிக்கின்றது. ஒரு சமூகம் கட்டாயமாக தனது நாட்டின் வரலாறு மற்றும் தனது சமூகம் சார்ந்த வரலாறுகளை கற்றுக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஒரு சமூகம் தனது கடந்த கால பின்னணி மற்றும் நடைமுறைகள், எதிர்காலத்தில் தனது சமூகம் பயணிக்கவேண்டிய முறைமைகள் என்பன பற்றி நாம் திட்டமிடுவதற்கும் கட்டாயம் நாம் எமது கடந்தகால வரலாறுகளை கற்றே ஆக வேண்டும். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கற்றுக்கொள்ளவில்லை என்பது வேதனையளிக்கின்றது. அண்மையில், தனது சொந்த ஊரில் இடம்பெற்ற கடினபந்து கிரிக்கெட் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார் அதாவது இலவசக்கல்வி முறையினை எதிர்த்தவர்கள் தமிழ் தலைவர்கள் இல்லை, அப்படி இருந்தால் சொல்லுங்கள் என அவர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவருக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். 1944ஆம் ஆண்டு டப்ளியு.டப்ளியு. கன்னங்கராவினால் கொண்டுவரப்பட்ட இலவசக்கல்வி மசோதாவை முதன்முதலில் எதிர்த்தவர்கள் ஜீ.ஜீ. பொன்னம்பலம், மகாதேவா, ஸ்ரீ பத்மநாதன், இவர்களெல்லாம் யார்? தமிழர்களின் தலைவர்கள் இல்லையா?
இவர்களின் வழி வந்தவர்கள்தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியாமல் போனதற்காக நான் வருந்துகின்றேன். எது எவ்வாறாக இருந்தாலும் இலவச கல்வி முறையினை எதிர்த்த தமிழ் தலைவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூதாதையர்கள் என்பதனை நான் ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இனிமேல் எமது மக்களை இவர்கள் ஏமாற்ற முடியாது. மக்களுக்கு பக்க பலமாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்றும் இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment